தமிழுக்கு அமுதென்று பேர், அந்ததமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

Monday, May 24, 2010

airtel super singer junior 2

SRINISHAALKKA
NITHYASRI
ROSHAN
SRIKANTH
SRIKANTH
SRAVAN,SRIKANTH,ROSHAN,SRATH&PRASANNASUNDAR
PRIYANKA,SAHAANA,ALKKA,SRINISHA&NITHYASRI

Sunday, May 23, 2010

வாருங்கள் என் கல்லூரிக்கு…


வந்தனம் உங்களுக்கு!
இது தான் என் கல்லூரி
இது ஒரு காதல் கோட்டை
காதல் தேசத்தின் தலைமைப்பீடம்
காதல்கள் விற்கப்படும் கலைக்கூடம்
இதற்கு
பல சாஜகான்களும்
இடைநடுவில் இறந்துபோகாத மும்தாஜுகளும்
உரிமை கோருகிறார்கள்…
இது ஒரு சமாதியல்ல…

உள்ளே வாருங்கள்
இதோ இடப்பக்கம் இருப்பது தான்
“கொமன் றூம்”
ஓய்வு அறை
இங்கே காதலர்கள் ஓய்வெடுத்துக்கொள்வார்கள்
காதல் புகுந்து விளையாடும்
புதுமை பெறும்…
இது காதலின்
கதவு சாத்தாத கருமபீடம்…

இந்த வழியில் இருப்பது
“கொட்ராங்கிள்”
முற்றம் என்று வைத்துக்கொள்ளுங்கள்
இங்கே திசைமாறி திரும்பிய
காதல் பறவைகள்
மீண்டும் கைகோர்த்துக்கொளும்
இங்கு இறக்கைகள் சரிபார்க்கப்படும்
அவை மீள இயக்கம் பெறும்…

இதோ பாருங்கள்
இதை பச்சை மரம் என்பார்கள்
காதலிப்பவர்கள் மீது
எச்சமிடாத காகங்களை மட்டும்
அது வளர்க்கிறது…

இந்த மூன்று திசைகளிலும்
விரிவுரை மண்டபங்கள்.
அங்கே அடிக்கடி
தாமரைப்பூக்களும் ரோஜாச்செடிகளும்
மாறிமாறி அடுக்கப்படும்
இடையிடையே
கண்படாமல் இருப்பதற்கும்
கல்லெறி வாங்குவதற்கும்
சிலர் அமர்ந்திருப்பார்கள்
அவர்கள்
முள்ளை பற்றிக்கொண்டு
மலர்களை ரசித்திருப்பார்கள்…

சரி
இந்த வாசலிலிருந்து
இடப்பக்கமாக இருநூறு அடி நடந்தால்
உணவுச்சாலை
காதலர்கள்
இங்கே ஒன்றாக அமர்ந்து
தேநீர் கோப்பையில் தேன் பருகுவார்கள்
தெகிவளை சோற்றை வெள்ளவத்தை உண்ணும்
வெள்ளவத்தைச்சோற்றை தெகிவளை உண்ணும்
கம்பஹா சோற்றை காலி உண்ணும்
காலிச்சோற்றை கம்பஹா உண்ணும்…
காதலால்
ஊர்களுக்கிடையில் உணவுச்சேர்க்கை…
காதலிக்காதவர்கள்
தேநீர் கோப்பையில் தேநீர் குடிப்பார்கள்…

வாருங்கள் மேலே போகலாம்
இதோ இருப்பது தான் நூலகம்
உலகின் பல பாகங்களிலும்
காதலிக்க முடியாதவர்கள்
காதலித்தவர்களை கரம்பிடிக்க முடியாதவர்கள்
எழுதி வைத்த புத்தகங்கள்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன…
இது காதல் தோல்விகளின் கல்வெட்டு!
இங்கே
தேவதைகளும் “தேவதையன்களும்”
ஒரே புத்தகத்துள் ஒளிந்திருப்பார்கள்
காதல்
மீட்சி பெறும்
மோட்சம் பெறும்
சில வேளைகளில்
சாட்சியின்றி சலனம் பெறும.;...

அது சரி
நூலகம் வரை வந்துவிட்டீர்கள்
இது வரை என்னைப்பற்றி
எதுவுமே கேட்கவில்லையே
நான் தான்
அந்த மரத்து காகங்களினால்
தேடித்தேடி எச்சமிடப்படுபவன்…

-காரையம்சன்-

Wednesday, May 12, 2010

அன்புக்கு ஓர் கவிதை...




அம்மா,
இன்று அன்னையர் தினமாம்
உன்னை நினைக்கச்சொல்லி
எனக்கின்று ஓர் தினமாம்...

உண்டு களித்து உறங்கியிருப்பாய் இந்நேரம்
கண்டு களித்து கவிதை வரைய
கண்முன் வேண்டும் உன்முகம்…
கவிதை ஒன்றைத்தவிர
வேறெதையும் சிந்திக்க முடியாத
இரவு இன்றெனக்கு…

அம்மா நீ,
என்பு சதைகொண்ட அன்பு
எண்ணற்ற பேர்களில்
என்னை ஆரம்பித்துவைத்தவள் - உன்னில்
வாய் மூக்கு செவி போன்று
வளர்ந்த ஓர் அங்கம் நான்…
உதிர்ந்து நான் விழுந்தபோதும்
உதிரத்தை பாலாக்கியவள் நீ

நீ எனக்கு
கருவறைதந்த கண்ணியவாள்…
எத்தனையோ கண்டுபிடிப்புக்களில்
என்னை கண்டுபிடித்தவள்
உலகத்தை எனக்கும்
என்னை உலகத்திற்கும்
அறிமுகப்படுத்தியவள்…

அம்மா நீ என்னை
கட்டியணைத்து கதை சொன்னவள் - நான்
தொட்டிலில் கிடந்து
துன்பம் தந்தவன்…

நீ ஒரு மெழுகுவர்த்தி
நீ உருகி வழிய
உண்டானவன் நான்…
உருக்குலைந்தவள் நீ
உருப்பெற்றவன் நான்…


அம்மா
கருவறையில் காவலிருந்த தெய்வமுண்டு - நீ
கருவறையில் எனை வைத்து
காவலிருந்த தெய்வமல்லவா

என்
மூக்கு பிடித்துவிட்டது முதல்
முழங்கால் புண்வரை
முன்னின்று கவனித்தவள் நீ…

கருவானேன் தரித்துக்கொண்டாய்
சிசுவானேன் சுமந்துகொண்டாய்
முத்தமிட்டேன் முந்திக்கொண்டாய்
கண்ணீர் விட்டேன் கட்டியணைத்தாய்
கட்டியணைத்தேன் கண்ணீர் விட்டாய்

தொண்டை நாக்கை விழுங்கினாலும்
தொப்புளில் தழும்பு மறைந்திடுமா
அண்டைவெளிகள் அணைந்தாலும்
அளவில் உன் அன்பு குறைந்திடுமா

ஏழு கடல் தாண்டினாலும்
எட்டாவது கடலில் மாண்டாலும்
ஊட்டி வளர்த்தவளே
உன்னுடன் இருக்கும் ஓர் வழியை
காட்டிக்கொடுத்து விடு
காலமெல்லாம் காயம் ஆறும்.

-காரையம்சன்

Tuesday, May 4, 2010

"தமிழருக்கான மருத்துவ ஊழியர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்

விஞ்ஞான மருத்துவத் தமிழ் முன்னோடி

"புத்தம் புதிய கலைகள் பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.." - பாரதி.

அன்று பாரதி அறியாத ஒரு சாதனை யாழ்ப்பாணத்திலே, ஈழத்தமிழகத்திலே நடந்து முடிந்ததை பாரதி அறியவில்லை. 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, குறிப்பாக அந்தக் கால் நூற்றாண்டு காலத்தில், புத்தம் புதிய கலைகள், குறிப்பாக, மேனாட்டு மருத்துவக்கலை - அமெரிக்க மிஷன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே வளர்க்கப்பட்டது. இதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர் டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green) என்ற அமெரிக்க வைத்தியரும் கிறிஸ்தவ மத ஊழியருமாவார். யாழ்ப்பாணத் தமிழரையும் சென்னையில் இருந்த கிறிஸ்தவ மத ஊழியரையும் தவிர, பிறர் இந்த முன்னேற்றத்தைப் பற்றி அறியவில்லை.

அமெரிக்க மிஷன் ஊழியராக யாழ்ப்பாணம் வந்து ஊழியஞ் செய்த அப்பெருமான், மேனாட்டு மருத்துவக் கலையை நம்மக்களிடையே படிப்படியாக அறிமுகப்படுத்தினார். மானிப்பாயிலே மருத்துவமனை நிறுவி, மருத்துவம் செய்ததுடன் அன்னார் நின்று விடவில்லை. தொடர்ந்து, சுதேசிகளுக்கு மேனாட்டு மருத்துவப் பயிற்சி அளித்தார்.
காலப்போக்கில், தமிழிலே மருத்துவக் கல்வியை ஆரம்பித்தார். ஆங்கில மொழி மூலம் 29 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தார். தமிழ்மொழி மூலம் 33 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.


தமிழ் மக்களிடையே பணியாற்றச் செல்கிறேன் என அறிந்தபடியால், வருமுன்பே சிலரிடம் ஓரளவு தமிழ் பயின்றார், வந்தபின், கிரமமாகத் தமிழ் பயின்று, மேனாட்டு மருத்துவ நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் ஆர்வம் கொண்டார். அதனால், தமிழருக்குக் கிடைத்த மருத்துவ நூல்கள் எத்தனை?
கட்டரின் அங்காதிபாதம், சுகரணம் (1857)
மோன்செல்ஸ் மாதர் மருத்துவம் (1857)
துருவிதரின் இரணவைத்தியம் (1867)
கிறேயின் அங்காதிபாரதம் (1872)
மனுஷ சுகரணம் (1883)
வைத்தியாகரம் (1872)
கெமிஸ்தம் (1875)
வைத்தியம் (1875)
கலைச் சொற்கள்

இவைதவிர, பெண்கள் குழந்தைகளுக்கான மருத்துவ நூல்களும் பதார்த்த சாரம், சிகிச்சம், மருத்துவம் முதலிய வேறுபல சிறு கைநூல்களும் அவரால் வெளியிடப்பட்டன.

யாழ்ப்பாணத்திலே தமது மிஷ்னரிச் சேவையை ஸ்திரப்படித்திய அமெரிக்க மிஷன் மருத்துவ சேவையையும் துவங்குவதென 1819ஆம் ஆண்டிலே தீர்மானித்தது. அதன்படி 1820ஆம் ஆண்டிலே பண்டத்தரிப்பில் முதலாவது மருத்துவ நிலையம் நிறுவப்பட்டது. சமயப் பணிக்காகவும் கிறிஸ்தவ மத போதனைக்குமென வந்த மிஷனரிமார் சமூக சேவையும் மனிதாபமான வழிகளையும் தொடர்ந்ததை இது உணர்த்துகிறது. இறைவனை 'மக்களிலே காணவேண்டும்' என்ற லட்சியத்தை அவர்கள் நடைமுறைப்படுத்தினர்.

மருத்துவச் சேவையை 1820-களிலே துவக்கி வைத்தவர் டாக்டர் ஸ்டேர். அவரைத் தொடர்ந்து பணியாற்ற வந்தவர் டாக்டர் நேதன் உவாட். அவர் தம் சேவைக் காலம் முடிவடைய வந்து பணியை ஏற்றவர் தான் டாக்டர் சாமுவேல் கிறீன். இவர் அமெரிக்க நாட்டிலே, மசச் சூசஸ்ட் மாநிலத்திலே "வூஸ்டர்" என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். நீராவிக் கப்பல் மூலம் வந்த கிறீன், சென்னையில் தங்கி, பின்பு 1847 ஒக்டோபர் ஆறாம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்தார். வட்டுக்கோட்டையிலே தமது பணியை ஆரம்பித்து பின்னர் 1848 இலே மானிப்பாய்க்கு மாற்றம் பெற்றார். அங்குதான் கிறீனின் சாதனை யாவும் இடம்பெற்றன. மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் - இவ்வண்ணம் பல்வேறு முயற்சிகள்.



1855ஆம் ஆண்டிலே 'கொலரா' நோயால் பலர் பீடிக்கப்பட்டனர். அவர்களுடன் டாக்டர் கிறீனும் ஒருவர். கிறீனின் சகோதரி, அவரை அமெரிக்கா திரும்புமாறு வேண்டிக் கொண்டார். ஆனால் அவரோ, மனவுதியுடன், "தாம் தொடங்கிய தமிழில் மருத்துவம் தரும் பணியை" இடையிலே நிறுத்திவிட்டுத் திரும்புவதற்கு மறுத்துவிட்டார். "எனது 10 ஆண்டுகளையும் இங்கு நிறைவு செய்யவே நான் விரும்புகிறேன்" என்று முடிவாகக் கூறினார்.

தமது பத்தாண்டுச் சேவை முடிந்தபின் அமெரிக்கா திரும்பி ஓய்வுபெற்ற கிறீன், திருமணஞ் செய்துகொண்டு, ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் யாழ் திரும்பி, தமிழில் மருத்துவங் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்தார்.

கல்வி வசதி பெற்ற யாழ்ப்பாணத்தவரின் வாழ்க்கை முறை பற்றி கிறீன் என்ன கருதினார்? 1864ஆம் ஆண்டிலே, அவரே கூறுகின்றார்:
"வேட்டி காற்சட்டையாகவும், சால்வை மேற்சட்டையாகவும், தலைப்பாகை தொப்பியாகவும், தாவர போசனம் மாமிச போசனம் ஆகவும், குடிசை வீடாகவும் மாறுகின்றன. எனவே, நான் எண்ணுகிறேன்... ஐரோப்பியரின் நடையுடை பாவனைகளைப் பின்பற்றும் இந்துக்களை விடக் கிறிஸ்தவ இந்துக்களையே காண ஆசைப்படுகிறேன்." கிறிஸ்தவராதல் என்றால் தேசியத்தை இழப்பதல்ல என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

மருத்துவக்கல்வியை மானிப்பாயிலே தமது கல்லூரியில் தமிழில் கற்பதென்று 1855ஆம் ஆண்டிலேயே தீர்மானித்தார். அப்போது மாணவர் சிலர் அம்மாற்றத்தை விரும்பவில்லை என உணர்ந்தார். அவ்வேளையிலே தமது கருத்தை வெளிப்படையாகக் கூறினார்.
"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கட் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்." இவ்வண்ணம் உறுதியாகக் கூறிய கிறீன், தமிழில் மேனாட்டு மருத்துவதைத் துவங்கிய முன்னோடியாவார். தமிழ்மொழி மூலம் 33 மேனாட்டு வைத்தியரைக் கற்பித்த பின்பே, அவர் அமெரிக்கா திரும்பினார். எனினும், அங்கிருந்தும் தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார். அன்னார் மருத்துவத் தமிழ் எனவும் அறிவியல் தமிழ் முன்னோடி என்றும் தமிழரால் கௌரவிக்கப்படல் தவறில்லையே?

தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர் (Medical Evangelist to the Tamils)" என அதில் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884இல் டாக்டர் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. வூஸ்டர் கிராம அடக்கசாலையில் அந்நினைவுக்கல் கிறீனை நினைவு படுத்தி இன்றும் நிமிர்ந்து நிற்கின்றது

யாழ் நூல் தந்த சுவாமி விபுலாநந்தர்


சுவாமி விபுலாநந்தர் பிறந்து சுமார் 114 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. சுவாமி விபுலாநந்தரின் கல்விப் பணியும் அவர் ஆற்றிய தமிழ்ப் பணியும், அவர் உருவாக்கிய தாபனங்களும் காலத்தால் மறையாது. இலங்கையில் தமிழ்த் திறனாய்வுத்துறை வளர்ச்சி பெறுவதற்கு முதற்படியை அமைத்துக் கொடுத்தவர் சுவாமி விபுலாநந்தரே என்றால் அது மிகையாகாது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் இருக்கும் வரை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் திருநாமமும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.


சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சாமித்தம்பி, கண்ணம்மையார் தம்பதிகளுக்கு பிறந்தார்.

இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. Cambridge Senior பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டைய தமிழ் இலக்கியங்களைக் கற்றார்.

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழிநுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916இல் விஞ்ஞானத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய தேர்வில் தோற்றி பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலானந்தரே. கொழும்பு அரசினர் தொழினுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராக பணியாற்றினார் மயில்வாகனனார். அவரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் (சென் பற்றிக்ஸ்) கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் 1920 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக்கல்லூரி முகாமையாளரும், திருப்புகழுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

இயல்பாகவே இறை நாட்டம் கொண்டிருந்த மயில்வாகனன் 'ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன்', சமயத்திற்காக ஆற்றி வரும் பணிகளை அறிந்து, தம்மையும் அந்த அமைப்புடன் ஈடுபடுத்திக் கொள்ளலாமென எண்ணியிருந்த வேளையில், யாழ்ப்பாணத்துக்கு 1917ஆம் ஆண்டில் சுவாமி சர்வானந்தர் வருகை புரிந்தார். சர்வானந்தரின் தொடர்பு மயில்வாகனனின் உள்ளத்துள் 'திறவுத் தூய்மை' எனும் திருவிளக்கை ஏற்றி வைத்தது.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக 'யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்' என்ற கழகத்தை அமைத்து தமிழை வளர்க்கலானார். இந்தச் சங்கத்தின் மூலம் பிரவேசப் பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் என மூன்று தேர்வுகளை ஏற்படுத்தினார். மயில்வாகனனாரின் இந்த முயற்சி எத்தனையோ பண்டிதமணிகளை ஈழநாட்டிற்கு அளித்துள்ளது.

மனத்தை ஈர்ந்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சிவானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. இரண்டு வருடங்கள் அங்கு பயின்ற அவர், இராமகிருஷ்ண மிஷன் நடத்திய 'இராமகிருஷ்ண விஜயம்' என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும், 'Vedanta Kesari' என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்ஷையின் பரீட்ஷார்த்தகராக நியமிக்கப்பட்டார். தமிழ்ச்சங்க வெளியீடான 'செந்தமிழ்' எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், 'மதங்க சூளாமணி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

1924ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சிவானந்தரால் "சுவாமி விபுலாநந்தர்' என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.

செட்டி நாட்டாரசர் வேண்டுகோளின் படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1931 ஆம் ஆண்டு தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். அக்காலப் பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934 ஆம் ஆண்டில், அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்து விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள Almorah என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் 'பிரபுத்த பாரத (Prabuddha Bharatha)' என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அங்கு தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம் பெற்றது.

1943 ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியபோது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத்துறை எவ்வழியில் செல்லவேண்டும் என்ற திட்டங்களை சுவாமி விபுலாநந்தரே வகுத்தார் என்பது நினைவில் இருக்கத்தக்கது. அவரைத் தொடர்ந்தே பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் செல்வநாயகம், பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் சதாசிவம் போன்ற அறிஞர்கள் தமிழ்த் துறையை விருத்தி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாமி அவர்களின் தமிழ் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய "யாழ்நூல்" ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம் பூதூர்த் திருக்கோயிலில் நாளும் செந்தமிழ் இசைபரப்பிய ஞானசம்பந்தனின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள் வியக்க, கற்றோரும், மற்றோரும் பாராட்ட தேவாரப்பண்களை தாமே அமைத்து 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.

முதல் நாள் விழாவில் திருக்கோயில் வரிசைகளுடன் இயற்றமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சூழ்ந்து வர சுவாமி அவர்களை தெற்குக் கோபுர வாயிலின் வழியாக திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். சுவாமி அவர்கள் தானே ஆராய்ந்து கண்டுபிடித்த வரைபடத்துடன் விளக்கிய பின்னர், அவர் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை, பாரிசாதவீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கி சிலர் சென்றார்கள். நாச்சியார் முன்னிலையில் சுவாமி இயற்றிய 'நாச்சியார் நாண்மணிமாலை' வித்துவான் அவ்வை துரைசாமிப்பிள்ளை அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது. பாராட்டுரைகளுக்குப் பின்னர் சங்கீதபூஷணம் க.பெ. சிவானந்தம் பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய முதல் நாள் விழா இனிதாக நிறைவேறியது.

இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ. முருகப்பா, தமிழ்ப்பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர், இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், புரவலர் பெருமான் பெ. ராம. ராம. சித. சிதம்பரம் செட்டியார், மற்றும் பலர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பின்னர் சுவாமி விபுலாநந்தர் யாழ் பற்றிய அரிய தகவல்களை எடுத்துவிளக்கினார். வித்துவான் வெள்ளைவாரணர் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் "யாழ்நூல்" அரங்கேற்றப்பட்டது.

சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில், யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்த விரிவுரையாகவும், விளக்கமாகவும் அமைந்தது யாழ் நூல்! ஆயிரம் ஆண்டுகளாக வழக்கற்று மறைந்த இசைத்தமிழின் அருமையைத் தமிழர் உணர்ந்து பெருமை கொள்ளச் செய்தது இந்த நூல்.

யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் கலந்து கொள்வதற்கு புறப்படும் முன்னர் சுவாமி அவர்கள் உடல் நலம் குன்றி இருந்தார். பயணம் செய்யக் கூடாதென்ற வைத்தியர்களின் ஆலோசனையையும் கேளாது நீண்ட நெடும் நாட்களாக தாம் கண்ட இலட்சியக்கனவை நனவாக்க தமிழர்களின் பழம் பெருமையை எடுத்தியம்ப, மறைந்துபோன யாழிசையைப் பரப்ப பயணமானார். ஓய்வு உறக்கமின்றி செயல்பட்டதால், உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தளராத நம்பிக்கையே அவரை வழிநாட்த்தியது. அதனால் கடுமையான நோயின் பாதிப்புக்குள்ளானர்.

யாழ் நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். கொழும்பில் மருத்துவ விடுதி ஒன்றில் தங்கி சிகிச்சை பெறலானார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் அமரத்துவம் அடைந்தார். சுவாமி அவர்களின் பூதவுடல், சுவாமி அவர்கள் கண்ணும் கருத்துமாக உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

சுவாமி அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை மேல் சமாதி ஒன்று எழுப்பப்பட்டது. அதில் சுவாமி அவர்கள் யாத்த:

"வெள்ளைநிற மல்லிகையோ?
வேறெந்த மாமலரோ?
வள்ளல் அடியிணைக்கு

வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல!
வேறெந்த மலருமல்ல!
உள்ளக் கமலமடி

உத்தமனார் வேண்டுவது!"

என்ற உயிர்த்துடிப்புமிக்க கவிதா வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்-ஒரு பார்வை


கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள் (அனைத்துலக தேடல்) ஒரு பார்வை
-திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் (சிட்னி) -

'கனவான்களே! இந்த ஓலைச்சுவடிகள் சிதைந்து அழிகின்றனவே என்ற கவலை உங்களுக்கு இல்லையா? தமிழ் உங்கள் தாய் என நீங்கள் உணரவில்லையா? இறக்கும் தறுவாயில் உள்ள உங்கள் தாய்க்கு உதவ நீங்கள் ஏன் எதுவும் செய்கிறீர்களில்லை? தேசிய உணர்வு, மத உணர்வு, மொழி உணர்வு என்பவை இல்லாமல் வாழ்தல் பெருமைக்குரிய விசயம் என எண்ணுகின்றீர்களா? தயவு செய்து இதனை ஆழமாகச் சிந்தியுங்கள்".

தமிழ் மக்களை நோக்கி, இப்படி விண்ணப்பம் செய்கிறார் தமிழ் அறிஞர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள். இது நடந்தது 19 ஆம் நூற்றாண்டிலே. அவருடைய வேண்டுதலைச் செவிமடுத்த பலர், பண்டைத் தமிழ் செல்வங்களை, ஓலைச் சுவடிகளிலிருந்து மீட்டு அச்சிடுவதற்கு அந்தப் பெருமகனாருக்கு உதவி இருக்கிறார்கள்.

ஒன்றரை நூற்றாண்டு காலத்துக்குப் பின், அந்த அறிஞரின் அறைகூவலுக்கு, கலாநிதி குணசிங்கம் அவர்கள் புத்தூக்கம் அளித்துள்ளார். இன்று, அந்த தமிழ் மகனின் வழியிலே, இவரும் ஒரு 'தமிழ் ஆவணத் தேடலை" ஆரம்பித்துள்ளார்.

கொழும்பு, சென்னை, கோவா, லிஸ்பன், நெதர்லாந்து, லண்டன், பாரிஸ், ஜேர்மனி, சுவிற்சலாந்து, அமெரிக்கா எங்கும் இரண்டு வருடகாலம் கலாநிதி குணசிங்கம் அயராது பயணிக்கிறார். அங்கே இருக்கும் நூலகங்கள் ஆவணக் காப்பகங்களிலே தனது தேடலைத் தொடர்கிறார். வாசகர்களாகிய நாமும் அவரோடு சேர்ந்து பயணிக்கிறோம். ஒவ்வொரு நூலகத்திலும் இருக்கும் வரைபடங்கள், கடிதப் பரிவர்த்தனைகள், புதினப் பத்திரிகைகள், மற்றும் பதிவுகள் பலவற்றிலும் இலங்கைத் தமிழ்மக்கள் பற்றிய செய்திகளைக் காண்பித்துக் கொண்டே செல்கிறார். நாமும் அவரோடு சேர்ந்து பார்க்கிறோம்.

ஒரே பிரமிப்பாக இருக்கிறது. எம்மைப் பற்றியும், எமது தாயகத்தைப் பற்றியுமுள்ள உண்மையான பதிவுகள் - மூல ஆதாரங்கள் - எம்மை அதிசயத்தில் ஆழ்த்துகின்றன.

யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததன் மூலம் எமது பாரம்பரியத்தையே சாம்பலாக்கி விட்டதாகக் குதூகலித்தவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் அடிபட்டுப் போய்விடுகின்றன.

நாம் ஆறுதல் அடைகிறோம். புத்துயிர் பெறுகிறோம். கலாநிதி குணசிங்கம் அவர்களின், இந்தத் தேடல் புத்தகமாக உருவாகிறது. அதுவே "இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்" - அனைத்துலகத் தேடல்". உலகெங்கும் பரந்திருக்கும் தமிழினத்துக்கு, இந்நூல் சிறந்ததொரு வழிகாட்டியாகிறது.

எல்லா மனிதருக்கும் ஒரு வரலாறு உண்டு. நாம் இன்னார் என்ற அடையாளத்தை இந்த வரலாற்று உணர்வுதான் எமக்குத் தருகிறது. நீ எங்கே போகிறாய் என்று அறிவதற்கு, நீ எங்கிருந்து வருகிறாய் என்பது உனக்குத் தெரிய வேண்டும் என்று அவுஸ்திரேலியப் பழங்குடி மக்களிடம் ஒரு முதுமொழி வழங்குவதாகத் தெரிகிறது.

இவ்விடத்தில் கலாநிதி குணசிங்கம் கூறுவது கவனத்திற்குரியது. "இன்றைய நிலையில் காணப்படும் பெரிய குறைபாடு என்னவெனில், எந்தவொரு தொல்லியலாளரோ, வரலாற்றாசிரியரோ, அல்லது சமூக விஞ்ஞான ஆசிரியரோ, அவர் தமிழராக இருந்தாலும் சரி, சிங்களவராக இருந்தாலும் சரி, இலங்கைத் தமிழரின் முழுமையான வரலாற்றை எழுதவில்லை" என்பதுதான். சிங்கள ஆய்வாளருக்கு ஏராளமான ஆதாரங்களும், எல்லா மட்டங்களிலும் அரசாங்க உதவிகளும் உண்டு. ஆனால் தமிழ் அறிஞர்களோ பாரியதடைகளையும் சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

காலாநிதி குணசிங்கம் அவர்கள் ஒரு வரலாற்றாசிரியர் மாத்திரமல்லர்; அவர் ஒரு சிறந்த நூலகரும் ஆவார். எனவே அவர் ஒரு நல்ல ஆய்வாளராகத் தனது தேடலைத் தொடர்கிறார்.கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பெளத்த மதம் இலங்கைக்கு வந்தது முதல், அரசன், அரச சபை, பெளத்த மதம் என்பன ஒரு வகைக் கூட்டு அமைப்பாக இயங்கி, தமது வரலாற்றுப் பாரம்பரியங்களை பேணி வந்துள்ளனரென்று அறிகிறோம். ஆனால் தமிழ் மக்களின் வரலாறு அவ்வாறு ஆவணப்படுத்தப்படாதது பெரிய குறையென்ற உண்மையை ஆசிரியர் இத்தேடலின் போது தெளிவுபடுத்துகிறார். எமது நாட்டுத் தமிழறிஞரானதனிநாயகம் அடிகளார் அவர்களே தனது வழிகாட்டி என்று கலாநிதி குணசிங்கம் கூறுகிறார். அடிகளார் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்த பின்னரே தனது தேடல் ஆரம்பித்ததாகக் கூறுகிறார். "ஐரோப்பிய நூலகங்களைத் தேடிச் செல்லத் தயாராக இருக்கும் ஊக்கம் மிகுந்த தமிழ் அறிஞர்களுக்கு, அங்கே மேலும் முக்கியமான, ஆர்வத்தைத் தூண்டக்கூடிய கண்டுபிடிப்புகள் காத்திருக்கின்றன" என்று அடிகளார் தமது கட்டுரையில் வழிகாட்டுகிறார்.

கி.பி. 1505 ஆம் ஆண்டு இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை.ஐரோப்பியரான போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும், பிரித்தானியரும், ஒருவர் பின் ஒருவராக எம்மை அடிமைப்படுத்தி ஆண்ட 450 வருடகாலத்தில் ஏற்பட்ட அரசியல், பண்பாட்டு மாற்றங்கள், தமிழ் மக்களின் வரலாற்றையே மாற்றி விடுகின்றன. ஐரோப்பியர்களின் வர்த்தகச் சுரண்டல்களும், மத மாற்றமும், அரசியல் முறையுமே இன்றைய எமது அவல நிலைக்குக் காரணம் என்பது வரலாற்று உண்மை. இந்த ஐரோப்பியரால் தமிழ்மக்கள் பற்றிய குறிப்புகள் யாவும் பதிவு செய்யப்பட்டு, அவர்களது நூலகங்கள், மற்றும் ஆவணக்காப்பகங்களிலே பேணப்பட்டு வருவதை கலாநிதி குணசிங்கம் அவர்களின் தேடல் முயற்சியின்போது, பார்க்கையில், அவர்கள் தமது சுயலாபத்திற்காகச் செய்த பதிவுகள், இன்று எமக்குச் சாதகமாக இருப்பதை உணரமுடிகிறது. வரைபடங்களும், காணிகள், மக்கள் பற்றிய குறிப்புகளும், சட்டங்களும், போர்களும், வர்த்தகம் பற்றிய செய்திகளும், மத மாற்றம் பற்றிய விபரங்களும் அன்றைய தமிழினத்தின் வரலாற்றைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இவற்றிலே முக்கியமானது, ஐரோப்பியர்கள் தாம் ஆதிக்கம் செலுத்திய நிலப்பரப்பின் எல்லைகளை, வரைபடங்களாகப் பாதுகாத்துள்ளமை.லிஸ்பன், நெதர்லாந்து போன்ற இடங்களிலுள்ள ஆவணக் காப்பகங்களிலே இந்த வரைபடங்கள் மிகவும் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருவதாக கலாநிதி குணசிங்கம் அவர்கள் விபரமாகக் கூறுகிறார். போர்த்துக்கேய, டச்சு ஆட்சிக்காலங்களிலே, தனித்தனி இராச்சியங்களாக விளங்கிய சிங்கள, தமிழ் அரசுகளை, பிரித்தானியர், தமது நிர்வாக வசதி கருதி ஒன்றாக்கியதால் ஏற்பட்ட சிக்கல் இன்றுவரை தொடர்வதை இந்நூலில் தெளிவாக அறிகிறோம்.

H. Cleghorn என்னும் பிரித்தானிய சிவில் சேவை அதிகாரியின் பதிவொன்றை இந்நூலிலே பார்க்கிறோம்~மிகவும் புராதன காலத்திலிருந்தே, இருவேறு பட்ட மக்கள், நாட்டை, வெவ்வேறாகத் தமக்குள் பிரித்து உடைமையாக்கிக் கொண்டுள்ளனர். முதலாவதாக, சிங்களவர் நாட்டின் மத்திய பகுதியிலும், தெற்கிலும், மேற்கில் வளவை கங்கையிலிருந்து சிலாபம் வரையில் வாழ்கின்றனர். இரண்டாவதாக மலபார் மக்கள் (தமிழர்) வடக்கு, கிழக்கு மாவட்டங்களை உடைமையாகக் கொண்டுள்ளனர். இந்த இரு தேசியங்களின் மொழி, மதம், பழக்க வழக்கங்கள் என்பன முற்றிலும் வேறுபட்டவையாகும்."

இதே கருத்தை, வடக்கிலே, கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வந்த வணக்கத்திற்குரிய William Howland கூறுவதையும் ஆசிரியர் காட்டுகிறார். "இலங்கையின் தெற்கிலும், மத்தியபாகங்களிலும் சிங்களவர் வசிக்கின்றனர், இவர்கள் வேறு மொழியைப் பேசி, வேறு மதத்தை அனுசரிப்பவர்கள்.தமிழர்களின் சமயம் பிராமணியம். இவர்கள் வட மாகாணத்திலும், மேற்கில் சிலாபம் வரையும், கிழக்கில் மட்டக்களப்பு வரையும் வசிக்கின்றனர்."

இந்தக் காப்பகங்களிலுள்ள வரைபடங்களின் முக்கியத்துவம் பற்றிக் கலாநிதி குணசிங்கம் அவர்கள் கூறுகையில்- "தமிழர் தாய் நிலத்தின் புவியியல் தொடர்பான உண்மை நிலையினை அறியவேண்டின், புவியியல், வரலாற்று ஆய்வாளர்கள், இந்த ஆரம்ப வரைபடத் தொகுப்புகளில் விசேட கவனம் செலுத்துவது அவசியம்."என்கிறார். "அரசியல் கொந்தளிப்பு நிலவும் இச்சந்தர்ப்பத்தில் இது மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாகவும் உள்ளது. அநுரதபுரமும், கிழக்கிலங்கையும், மிகவும் கவனத்துடன் ஆராய்ச்சி செய்யப்பட்டால், தற்போதுள்ள குழப்பநிலை தெளிவாகும்" என்று மேலும் விளக்குகிறார்.

நெதர்லாந்து நாட்டு ஆவணங்களிலே முக்கியமானவை "தோம்புகள்" எனப்படும் காணிப்பதிவுகள். இது ஆட்களின் எண்ணிக்கையையும் காணிகளையும் குறித்த பதிவு அட்டவணையாகும். இதனில் எல்லா மக்களினதும், அவர்களது காணிகளும், அவை அமைந்துள்ள மாகாணம் மாவட்டம், வெவ்வேறாகப் பதியப்பட்டு, ஒரே பார்வையில் கம்பனியின் உடைமைகளின் அளவையும், பரப்பையும் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது- என்னும் பல விபரங்களைப் பார்க்கிறோம்.

150 வருடகால டச்சுக்காரரின் ஆட்சியின்போது, எவ்வாறெல்லாம் வளங்களைச் சுரண்டினார் என்பதும், செல்வம் குவிப்பதற்கு எத்தனை வழிகளில் முயன்றனர் என்பதும் இவற்றின் மூலம் தெரிகிறது.தமிழ் மக்களுடைய காணிகளின் தெளிவான விபரங்கள், மாவட்ட எல்லைகள், விவசாயத்தின் வகைகள், வியாபாரங்களின் விபரங்கள், தொழில்கள், வருமானம், வாழ்க்கை முறை என்பன இவ் ஆவணங்கள் மூலம் தெரியவருகின்றன.உள்ளுர் முறைமைகளை ஆராய்ந்து, இவற்றோடு ஒத்துப்போகும்வகையில், டச்சுககாரர் தமது நிர்வாக முறைகளை அமைத்துக் கொண்ட செய்தியை தேச வழமை பற்றிய பதிவுகளில் ஆசிரியர் காட்டுகிறார். தேச வழமை என்பது யாழ்ப்பாணத் தீபகற்பத்திலும், வன்னிப்பிரதேசங்களிலும் பாரம்பரியச் சட்டமாக இருந்தது என்று அறிகிறோம் - ஓர் எழுதாச் சட்டம். "முதுசம், திருமணம், இன்னும் ஏனைய வழிகளில் வந்த குடும்பச் சொத்து, அக்குடும்பத்துக்கு சொந்தமில்லாத வேறு எவராலும் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது" என்பதே தேச வழமையின் பிரதான நோக்கமாக இருந்தது.

இந்த இறுக்கமான அமைப்பு, தமிழர்களின் நெருங்கிய குடும்ப உறவுகளைப் பாதுகாத்து வந்ததோடு, தமிழர்களின் பெருத்த குடும்ப முறைமைக்கும் அடிப்படையாக இருந்தது என்றும் ஆசிரியர் விளக்குகிறார்.மேலும் இவ் ஆவணக் காப்பகங்களிலே, ஆட்சியாளருக்கும், அவர்களுடைய பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த கடிதப் பரிவர்த்தனைகள் மூலம் அக்காலத்திய சமூக நிலை பற்றி அறியமுடிகிறது. கலாநிதி குணசிங்கம் அவர்கள், லண்டன் தேசியக் காப்பகத்திலுள்ள, இரு கடிதப் பதிவுகளை முழுமையாகப் பிரசுரித்ததன் மூலம் அக்காலத்தில் நிலவிய சாதிப்பிரச்சனை பற்றிய தெளிவான பார்வையைத் தருகிறார். தாழ்த்தப்பட்ட மக்கள் தமது குறைகளை விளக்கி எழுதிய விண்ணப்பம் ஒன்றையும், அதற்கு மறுப்பாக உயர்சாதியினர் எழுதிய கடிதத்தையும் பார்க்கும்போது, அக்காலத்தில் நிலவிய இறுக்கமான சாதி அமைப்புப் பற்றி அறிகிறோம்.

இவற்றைவிட யாழ்ப்பாணத்தில் பெண் கல்வி தொடர்பாகவும் வைத்தியக் கல்வி பற்றியும் பல செய்திகளை அமெரிக்க நூலகங்களிலிருந்து தருகிறார். அச்சு இயந்திரம், காகிதம் என்பவற்றின் வருகையால் பிரசுரிக்கப்பட்ட, நூற்றுக்குமதிகமான பத்திரிகைகள் தேதி வாரியாகப் பல நூலகங்களிலே பேணப்பட்டு வருவதையும் அறியத் தருகிறார். கிறிஸ்தவ மதப் பத்திரிகைகளான உதயதாரகை, கத்தோலிக்கப் பாதுபாவலன், Ceylon Catholic Messenger, Jaffna Catholic Guardian என்பனவும், அவற்றிற்கு மறுப்பாக வந்த சைவ போதினி, சைவ அபிமானி, இந்து நேசன் மற்றும் செய்தித்தாளான வீரகேசரி Times of Ceylon போன்ற பத்திரிகைகள் பற்றியும் அறிகிறோம்.

பலாத்கார மத மாற்றத்தினாலும், ஆட்சியாளர் தமது செல்வத்தைப் பெருக்குவதற்காக மக்களைச் சுரண்டி அவர்களை வறியவர்களாக்கியதாலும் யாழ்ப்பாண மக்கள் பலதடவை வன்னி நோக்கிப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள் என்ற செய்தியையும் அறிகிறோம்.

"The Spiritual and Temporal Conguest" என்னும் நூலில் போர்த்துக்கேயரான Queros எனபவர் "தமிழ் மக்கள் கரை காணாத்துன்பத்தில் உழல்கின்றனர்" என்ற கருத்துப்படக் கூறுகிறார்.

வன்னிச் சிற்றரசர் பலம் வாய்ந்திருந்ததையும் வன்னிப் பெருநிலம் போர்த்துக்கேய ஆதிக்கத்தின் கீழ் கட்டுப்பட்டிருக்கவில்லை என்பதையும் வன்னிப் புலப்பெயர்வு காட்டுகிறது. இந்த வரலாற்று நிகழ்வுகள் நடந்து 500 ஆண்டுகள் கழிந்து விட்டநிலையிலும், இன்னும் கூட தமிழ்மக்கள் கிட்டத்தட்ட அதே நிலையைத்தான் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள், என்று கலாநிதி குணசிங்கத்தின் கூற்றில் அவரது சரித்திரப் பார்வையில், மனிதாபிமானத்தையும் உணர முடிகிறது.

இந்நூல் வெறும் நூல்கள், ஆவணங்கள், அவை அமைந்திருக்கும் இடங்கள் என்ற பட்டியல்கள் அல்லாமல், சிறப்பாக ஒப்பு நோக்கில் ஆராய்ந்து எழுதப்பட்டிருப்பது இந்நூலின் பலம் என்றே சொல்லவேண்டும்.ஒரே நூலில் ஆங்கிலத்திலும், தமிழிலும் செய்திகளைப் பதிந்திருப்பது வரவேற்கப்படவேண்டியது. எவருக்கும் விளங்கக்கூடிய வகையில், எளிமையான ஆங்கிலத்தில், சுவைபட எழுதியிருப்பதால் எமது இளைய சந்ததியினருக்கு, நல்லதொரு வழிகாட்டியாக இந்நூல் அமையும் என்பதில் சந்தேகமில்லை. நிலக்கிளி அ. பாலமனோகரன் அவர்கள் அழகு தமிழில் இந்நூலை மொழி பெயர்த்திருப்பது, இதற்கு மேலும் மெருகேற்றியுள்ளது.

தனது தேடலுக்கு அன்புக்கரம் நீட்டியவர்களுக்கு நன்றி கூறுகையில், தமிழறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளைஅவர்களின் வழியிலேயே ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். இவை எமது தேசியச் செல்வங்கள். இலங்கைத் தமிழர் சம்மந்தமான ஆய்வுக்கு மாத்திரமின்றி, தமிழ் அடையாளத்தை நிறுவுவதற்கும் இவை அவசியமானவை. எனவே காலந்தாழ்த்தாது இதனைக் கருத்துக்கெடுத்து ஆவன செய்ய வேண்டும் என சகல தமிழ்ச் சமூகத்தையும் வேண்டுகின்றார்.

தமிழ் மக்களின் வரலாறு பற்றி அண்மையில் வெளிவந்துள்ள நூல்களின் வரிசையில் இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள் முக்கியமானதொரு இடைவெளியை நிரப்புவதில் வெற்றிகண்டுள்ளது.

"இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி முழுமையானதொரு நூலை உருவாக்குவதில் எனது பங்களிப்பாக இது போன்ற புத்தகத்தை ஆய்வுகளின் அடிப்படையில் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த முப்பது ஆண்டுகளாகவே என்னுள் இருந்தது. ஆனாலும் இந்த இலட்சியத்தை எப்போது ஈட்டப் போகின்றேனோ என்ற கேள்விகளும் உடன் இருக்கவே செய்தன. எத்தகைய சிரமங்கள் மத்தியிலும் எனது கனவை நனவாக்க வேண்டுமென்ற திடமான முடிவுக்கு வந்தேன்" என்று கலாநிதி குணசிங்கம் கூறுவதைப் பார்த்தபோது, அவரது உறுதியும், திடசித்தமும் வியக்கவைத்தது.

இவ்வேளை திரு ஆனா பரராஜசிங்கம் அவர்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரையில் வந்த வாசகம் ஒன்று நினைவில் வருகிறது. (தமிழுக்கு சம அந்தஸ்து வழங்கப்படுமேயானால் தமிழர் தமது இலக்கியம், பண்பாடு என்பவற்றோடு அவர்களுக்கே உரித்தான மனவலிமை, திடசித்தப்போக்கு என்பவற்றால், எம்மை அடக்கி ஆள முற்படுவார்கள் என்று சிங்கள மொழிச்சட்டத்தைக் கொண்டு வரும்போது பண்டாரநாயக்கா கூறினார் - Daily News, நவ.8 - 1955).

இந்தத் திடசித்தம்தான் கலாநிதி குணசிங்கத்தின் இந்தத்தேடல் வெற்றியின் இரகசியம்.

இந்நூலை பெற்றுக்கொள்ள: gunasingam@optusnet.com.au

இவ்வாக்கத்தை எழுதியவர்: திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் (சிட்னி)

சைவத்தமிழ் பேராசான் சுவாமி விபுலாநந்தர்


Vipulananda Adigal

Vipulananda Adigal

சைவத்தமிழ் பேராசான்

சுவாமி விபுலாநந்தர்

Swami Vipulanandar

(1892-1947)

ங்கம் கண்ட செந்தமிழின் திருநூல்கள் பலவற்றைத் தம் சலியாப் பேருழைப்பால் தந்து மகிழ்ந்த தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர், சேர நாட்டு ஞானச் செல்வர் இளங்கோ அடிகள் அருளிய சிலப்பதிகாரத்தை முழு உருவத்துடன் முயன்று பதிப்பித்து வெளியிட்ட விழுமிய ஆண்டு 1892.

ஆம்; ஒரு நூற்றாண்டுக்கு முன், நெஞ்சை அள்ளும் சிலம்பின் சிறப்பைத் தமிழர் முழுமையாக அறிந்திலர். முத்தமிழ்த் திறத்தையும் முழுதுணர்த்திய இளங்கோவின் வித்தகக் காப்பியத்தை, முழுமையாகப் பெற்றுச் சுவைத்த தமிழுலகம், பெருமிதம் கொண்டது; பெறற்கரிய பேற்றினை அடைந்ததாய்ப் பெரிதும் மகிழ்ந்தது என்றாலும், அடிகள், தம் காப்பியத்துள் இசைத்தமிழ் நுணுக்கங்களை எடுத்துரைக்கும் பகுதியின் இயல்பினை எளிமையாகவும், முழுமையாகவும் அறியாது, சற்றே அயர்ந்து மயங்கவும் செய்தது.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அறிஞர் பெருமான் அடியார்க்கு நல்லார் வாழ்ந்த காலத்திலேயே,பழமையான இசை, நாடகத் தமிழ் நூல்கள் பல, வழக்கற்று மறைந்துபோன அவல நிலையை, அப் பெருமானின் உரைப்பாயிரத்தால் அறிகிறோம்.

இத்தகைய நிலையில், இடர்ப்பாடின்றிச் சிலப்பதிகாரத்தைப் பயில்வோர் அனைவரும், இசைப் பகுதிகளைச் சற்றே கடந்து கற்பது வழக்கமாக இருந்தது; இன்னும் சொல்லப் போனால், பல்கலைக் கழகத்தார் சிலப்பதிகாரத்தைப் பாடமாக அமைக்கும் போது, அரங்கேற்றுக் காதையை அப்பால் நீக்கிப் பாடத்திட்டத்தை வகுத்து வழங்குவது பழக்கமாகவும் நின்றது.

இந்நிலையினை ஆழ்ந்து எண்ணிப் பார்த்து, அகத்துள் கவலை கொண்டது ஒரு தமிழ் உள்ளம்! 'முடிச்சினை' அவிழ்த்து, முடங்கிக் கிடக்கும் பொருளினைத் தெளிவுபடுத்த,அந்தத் தமிழுள்ள்ள அடிகோலியது; ஆராய்ந்தறியப் பேரார்வம் கொண்டது. ஓராண்டா? ஈராண்டா? தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள்! வேட்கையுடனும், வீறுகொண்ட பேராற்றலுடனும், ஓய்வின்றி, உறக்கமின்றி, மெய்வருத்தம் பாராது, வேறு பணிகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளி; நாளும் பொழுதும் உழைத்து, உள்ளாய்ந்து, இசை நூல் பொருள்களை எல்லாம் அறியுமாறும், புரியுமாறும் விளங்கவைக்கும் 'இசைத்தமிழ் ஞானக்கதிரை' ஏற்றி வைத்தது அந்தத் தமிழ் பேருள்ளம்!

பேருள்ளத்தை உடைமையாகப் பெற்ற பெரியார், சுவாமி விபுலாநந்தர்!

அப்பெரியார் ஏற்றி வைத்த ஞானக்கதிர் - யாழ் நூல்.

யாழ் நூல் அரங்கேறிய ஆண்டு - 1947.

அரங்கேற்றத்தில் பங்கேற்று, நூலின் அருமையுணர்ந்து போற்றிப் பாராட்டியோர்: இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், சுவாமி சித்பவாநந்தர், புரவலர் பெருமான் பெ. ராம. ராம. சித. சிதம்பரம் செட்டியார், மற்றும் பலர்.

அரங்கேற்ற ஊர்வலத்தில் இடம் பெற்ற இசைக் கருவிகள் யாழ் நூலின் கணக்குப்படி அமைந்த பண்டைத் தமிழரின் மறைந்தொழிந்த யாழ்கள், முளரி யாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்தண்டி வீணை, 'நரம்பின் மறை' எனத் தொல்காப்பியரும், 'இசையோடு சிவணிய யாழின் நூல்' எனக் கொங்குவேளிரும் குறிப்பிட்ட யாழ் நூற்பொருள் இருந்த இடமும் தடமும் தெரியாது மறைந்தொழிந்த நாளில், பெரும் புலமையால், பேராற்றல் மிக்க ஆய்வுத் திறத்தால், பெற்றிருந்த இசை நுணுக்கத்தால், பழந்தமிழ் யாழ்க் கருவியினை மீண்டும் உருவாக்கிப் பண்டையோர் வளர்த்த இசை நலங்களையெல்லாம் கேட்டு மகிழுதற்குரிய இசைத்தமிழ் முதல் நூலாக 'யாழ் நூல்' உருவாக்கித் 'தமிழ்ப் பெருங்கொடை'யாக வழங்கினார் சுவாமி விபுலாநந்தர். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில், யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்த விரிவுரையாகவும், விளக்கமாகவும் அமைந்தது யாழ் நூல்! கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியிட்ட சுவாமிகளின் யாழ் நூல், ஆயிரம் ஆண்டுகளாக வழக்கற்று மறைந்த இசைத்தமிழின் அருமையைத் தமிழர் உணர்ந்து பெருமை கொள்ளச் செய்தது. சுவாமி விபுலாநந்தரின் செயற்கரிய தமிழ்த் தொண்டு, தமிழறிஞர்களின் பாராட்டிதலையும் போற்றுதலையும் பெற்றுத் தனிப்புகழ் பெற்றது.

தேசப் பற்றும், தெய்விகப் பற்றும் கொண்டிருந்த சுவாமிகள், மகாகவி பாரதியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 'பாரதியின் எழுத்துகள் மனித நேயத்திற்கு வழிகாட்டும் கைகாட்டிகள்' என்றும், 'பாரதியின் கருத்துகள், இந்திய நாட்டின் மலர்ச்சிக்கு ஒளியூட்டும் கதிர்ச் சுடர்கள்' என்றும், 'பாரதியின் எண்ணங்கள்', தமிழ் மொழிக்குப் புதிய வண்ணங்கள் தீட்டிய தூரிகைகள்' என்றும் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில் பாரதி பற்றிய தம் கணிப்பை அற்புதமாகச் சித்தரித்துள்ளார். மகாகவி பாரதியின் பாடல்கல்லி இழையோடும் இனிமையும், எளிமையும் விபுலாநந்தரின் பல செய்யுள்களில் மலர்ச்சி பெற்று, மணங்கமழும் தாக்கத்தைக் காணலாம். எடுத்துக்காட்டாக, க்டவுள் வணக்கப் பாடலொன்றைச் சுவாமிகள் இயற்றியுள்ள இயல்பினைப் பார்த்தால், படித்தால் தெளிவு பெறலாம்.

"வெள்ளைநிற மல்லிகையோ?

வேறெந்த மாமலரோ?

வள்ளல் அடியிணைக்கு

வாய்த்த மலரெதுவோ?

வெள்ளைநிறப் பூவுமல்ல!

வேறெந்த மலருமல்ல!

உள்ளக் கமலமடி

உத்தமனார் வேண்டுவது!"

மகாகவி பாரதியின் பாடல்களை ஈழ நாட்டில் பற்றிப் பரவிடச் செய்த சுவாமிகள், அரசாங்க அடக்கு முறைக்கு அச்சப்படாது, தமிழ் நாட்டில் நிகழ்ந்த பாரதி விழாக்களுக்குத் தலைமை ஏற்றுச் சிறப்பித்தார்.

கிழக்கு இலங்கையில், வாழையடி வாழையென வந்த பழங்குடி மரபில், காரை தீவின் காரேறு மூதூர், இசைத்தமிழ்ப் பேராசான் சுவாமி விபுலாநந்தரைப் பெற்றெடுத்த பெருமை பெற்றது. சாமித்தம்பியார் வேளாளர் குடியில் விளங்கு புகழ் பெற்ற நல்ல மனிதராய்க் கண்ணம்மை எனும் வாழ்க்கைத் துணையுடன் நடத்திய குடும்ப வாழ்வில், அக்குலம் சிறக்க விபுலாநந்தர் தோன்றினார். ஆண்டு 1892 - அந்த ஆண்டிலே தான் சிலப்பதிகாரத்தை, உ.வே.சா.வின் உயரிய உழைப்பால், தமிழ்ச் சமுதாயம் முழுமையாகக் கண்டு களித்தது. பின்னொரு காலத்தில், சிலம்பின் இசைத்தமிழ் நுட்பத்தை எடுத்தியம்பவுள்ள பெருமகனையும் அதே ஆண்டு பிறப்பித்துச் சிறந்தது.

சாமித் தம்பியார் தம் புதல்வனுக்கு 'மயில்வாகனன்' எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். பள்ளிப் பருவம் அடைந்ததும் மயில்வாகனன், குஞ்சித் தம்பி எனும் ஆசானிடம் பாடங் கேட்டதோடு, தந்தையாரிடமும் தாய் மாமன் வசந்தரா பிள்ளையிடமும் கற்கும் வாய்ப்புப் பெற்றான். காரை தீவின் பிள்ளையார் கோயிலில் பட்டகையராப் பணியாற்றி வந்த வைத்தியலிங்க தேசிகர், தமிழ் மொழியுடன் வடமொழியறிவும் பெற்று விளங்கியதை அறிந்த சாமித் தம்பியார், மயில்வாகனன் அப்பெருந்தகையிடம் பயில்வதற்கு அனுப்பினார். தமிழ் இலக்கிய இலக்கணங்களை, தேசிகரிடம் தெளிவுறக் கற்ற மயில்வாகனன், செய்யுள் இயற்றும் திறத்தைத் தம் பன்னிரண்டாம் வயதிலேயே பெற்றிருந்தான். மயில்வாகனன் தனது கல்விக்கு வித்திட்ட தன் ஆசிரியர் குஞ்சித்தம்பி அவர்களை தனது செய்யுள் திறத்தினால் வாழ்த்தினார்:

"அம்புவியிற் செந்தமிழோ

டாங்கிலமும் எனக்குணர்த்தி அறிவுதீட்டி

வம்பு செறி வெண்கமல

வல்லியருள் எனக்கூட்டி வைத்த குஞ்சுத்

தம்பியென்னும் பெயருடையோன்

தண்டமிழின் கரைகண்த தகமையோன்றன்

செம்பதும மலர்ப்பதத்தைச்

சிரத்திருத்தி எஞ்ஞான்றும் சிந்திப்பேனே"

அக்காலத்தில் சென் மைக்கல் கல்லூரியில் அதிபராக இருந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வண பொனெல் என்பவராவர். இவர் கணித பாடத்தைப் போதிப்பதில் ஆற்றல் மிகுந்தவர். மயில்வாகனனாரின் கணித திறமைக்கு வித்திட்டவர் இக் குருவானவர். இக்கல்லூரியில் இருந்து பதினாறாவது வயதில் கேம்ப்றிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதன்மையாகத் தேறினார். தாம் கற்ற கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. பின்னர் கல்முனை மெதடிஸ்த பாடசாலையிலும் ஆசிரியராக இருந்தார். பின்னர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இரண்டாண்டு காலம் பயிற்சி பெறுவதற்காக 1911ஆம் ஆண்டு கொழும்பு வந்தார். 1912ஆம் ஆண்டு ப்யிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டாண்டுகள் பணி புரிந்தார்.

மொழித்துறையிலும் இலக்கியத்துறையிலும் மட்டுமன்றி விஞ்ஞானத் துறையிலும் தனது திறமையை வெளிக்காட்ட மயில்வாகனனார் பின்னிற்கவில்லை. 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் பொறியியற் கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916 ஆம் ஆண்டு விஞ்ஞானத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்.

இளமையிலேயே இறை பக்தியில் ஈடுபாடு கொண்டிருந்த மயில்வாகனன் தம் கிராமத்திலிருந்த கண்ணகி கோயிலுக்கு நாளும் சென்று வழிபாடு செய்து வந்தார். அப்போது மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் இலங்கையிலேயே முதன் முதலில் பங்கு பற்றி, முதன்மைத் தகுதி பெற்றார்.

இயல்பாகவே இறை நாட்டம் கொண்டிருந்த மயில்வாகனன் 'ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன்', சமயத்திற்காக ஆற்றி வரும் பணிகளை அறிந்து, தம்மையும் அந்த அமைப்புடன் ஈடுபடுத்திக் கொள்ளலாமென எண்ணியிருந்த வேளையில், இலங்கைக்கு சுவாமி சர்வானந்தர் வருகை புரிந்தார். சர்வானந்தரின் தொடர்பு மயில்வாகனனின் உள்ளத்துள் 'திறவுத் தூய்மை' எனும் திருவிளக்கை ஏற்றி வைத்தது.

ஆங்கிலப் பள்ளியில் விஞ்ஞான அறிவு பெற்றிருந்த மயில்வாகனன் 1920-ஆம் ஆண்டு மானிப்பாய் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியரானார். மனத்தை ஈர்ந்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன்.

'பிரபோத சைதன்யா' எனும் தீட்ஷா நாமத்தைப் பெற்று, 1924 ஆம் ஆண்டு சுவாமி சிவானந்தர் ஞான உபதேசம் அருள 'சுவாமி விபுலாநந்தர்' என்ற திருப் பெயர் பெற்றார் மயில்வாகனன். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் திறமும் உரமும் பெற்றிருந்த சுவாமி விபுலாநந்தர் 'ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயம்' எனும் தமிழ் இதழுக்கும், 'வேதாந்த கேசரி' எனும் ஆங்கிலத் திங்கள் வெளியீட்டிற்கும் ஆசிரியர் ஆனார். சுவாமிகளின் பேரறிவுத் திறத்தையும், பெருங்கருணை இயல்பினையும் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது.

இலங்கையில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் நடத்தி வந்த பள்ளிகளை எல்லாம் சீரோடும் சிறப்போடும் நிர்வகித்து வந்த விபுலாநந்தர், மட்டக்களப்பில் ஆங்கில அறிவியல் கல்வியைப் போதிக்க 1929-ம் ஆண்டில் சிவானந்த வித்தியாலயத்தை நிறுவினார். யாழ்ப்பாணம் 'ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் என்றோர் அமைப்பைத் தொடங்கி வைத்து, பிரவேஷாசப் பண்டிதத் தேர்வு, பால பண்டிதத் தேர்வு, பண்டிதத் தேர்வு ஆகிய தேர்வு முறைகளை ஏற்படுத்தி, தமிழ் மொழி வளர்ச்சிக்கு, தக்க நெறிகளை வகுத்தளித்தார்.

செட்டி நாட்டாரசர் வேண்டுகோளின் படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1931 ஆம் ஆண்டு தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார்.

தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றுடன் இலத்தீன், யவனம், வங்கம், சிங்களம், அரபி முதலாய பன் மொழிப் புலமை பெற்றிருந்த சுவாமி விபுலாநந்தர், 'ஆங்கிலவாணி', 'விவேகானந்த ஞானதீபம்', 'கர்மயோகம்', 'ஞானயோகம்' முதலிய பல மொழி பெயர்ப்பு நூல்களை ஸ்ரீ இராமகிருஷ்ண மடாலயத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் நடைபெற்ற தேசிய தெய்வீக மொழியுணர்வு தழைத்துச் செழிக்கத் தம் உரையாற்றலை உரமாக்கினார் சுவாமிகள்.

'பிரபுத்த பாரத' எனும் இதழிற்கு ஆசிரியரான சுவாமிகள், இமயமலைச் சாரலில் உள்ள மாயாவதி ஆசிரமத்தில் தங்கினார். அப்போது தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம் பெற்றது.

யாழ்நூல் அரங்கேற்றத்திற்குப் பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பிய சுவாமிகள், கொழும்பில் மருத்துவ விடுதி ஒன்றில் தங்கி சிகிச்சை பெறலானார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ம் நாள் (19/07/1947) சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் அமரத்துவம் அடைந்தார். சுவாமி அவர்களின் பூதவுடல் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சுவாமி அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணியும், அவர் உருவாக்கிய தாபனங்களும் காலத்தால் மறையாது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் இருக்கும் வரை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் திருநாமமும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

எழுதியவர்: குன்றக்குடி பெரியபெருமாள்

மேலும் பார்க்க:

--------------------------------------------------------------------------------

Links to other articles:

யாழ் நூல் நிலையம் - ஒரு சாட்சியம்

அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மேல் நிற்பது போன்ற உணர்ச்சி மேலிட்டது.

"எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?" கலங்கிய கண்களோடு என் முன் நின்ற யாழ் பொது நூலகர் திருமதி ஆர். நடராஜா (பின்னூட்டம் பார்க்க) விடுத்த உருக்கமான கேள்வி இது.

நாட்டின் அனைத்துத் திசைகளில் இருந்தும், ஏன், உலக நாடுகள் எங்ஙனுமிருந்தும், ஆயிரமாயிரம் நல்லிதயங்களிலிருந்து எழும் கேள்வியும் இதுவே.

யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் இரவல் வழங்கும் பகுதியின் நடுவே வெறுமையின் கோரத்தில் சிந்தையைச் செலுத்தியவனாக நிற்கிறேன் நான்.

முன்னர் எத்தனையோ தடவைகளில் என் சிந்தைக்கு விருந்தளித்த அந்த அறிவுக் களஞ்சியம், சிதைத்த சூன்யமாகி விட்டிருந்தது. இதயமற்றோர் கடந்த ஜூன் மாதம் முதல் நாளிரவு மூட்டிய தீயினால்!

இத்தகு அழிவுகளைப்பற்றி வரலாற்று ஏடுகளிலே வாசித்திருக்கிறேன். ஆனால் வாழ்க்கையில் கண்டதில்லை. பண்டைய எகிப்தில் உலகப் புகழார்ந்த அலெக்ஸாந்திரியா நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதை நினைத்தேன் ஒரு கணம். எமது நாட்டிலும் பதின்மூன்றாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் பொலனறுவை, கண்டி ஆகிய நகர்களில் அழிக்கப்பட்ட நூலகங்களும் என் எண்ணத்தைத் தொட்டன.

ஊனமுற்ற சுவர்களிலே பயங்கரமான புண்களைப் போல் காட்சியளித்த ஜன்னல்களின் இடைவெளியினூடாக அவ்வேளை திடுமென வீசிய காற்று, என்னை நூலகர் வழங்கிக் கொண்டிருந்த விளக்கத்திற்கு மீட்டு வந்தது. அத்தோடு முற்றாய்க் கரிந்து போன நூல்களின் சாம்பலை அக்காற்று எம் உடம்பின் மீதும் தூவிச் சென்றது.

யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் சிதைவினால் அறிவுலகிற்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத இழப்பின் தன்மையை விளக்குமுன், இந்நூலகத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றிய சில தகவல்களை நாமறிந்து கொள்வது அவசியமாகும்.

1934ஆம் ஆண்டு ஆனி மாதம் 9ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றே பொது நூலகத்தின் தோற்றத்திற்கு அடிகோலியது. இக்கூட்டக் காரியதரிசி திரு. க. மு. செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 184 ரூபா 22சதம் தான் முன்னோடியான பொது நூலகம் ஒன்றிற்கான மூலதனமாய் அமைந்தது.

இதன் வழி ஆஸ்பத்திரி வீதியில் வாடக அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36 பருவ வெளியீடுகளுடனும், 1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிறியதொரு பொது நூலகம் வசதியின்றி இடர்ப்பட்ட போது அதனை யாழ்ப்பாணப் பட்டின சபை பொறுப்பேற்று 1-1-1935 இல் வாடி வீட்டிற்குத் தெர்கிலுள்ள மேல் மாடிக்கு இடமாற்றஞ் செய்யப்பட்டு, அங்கே இயங்கி வந்தது.

சகல வசதிகளையும் கொண்ட நவீன பொது நூலகக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் 1952ஆம் ஆண்டு ஆனி மாதம் 14ஆம் திகதி சாம் ஏ. சபாபதி அவர்களின் தலைமையில், நடைபெற்ற ஒரு மகாநாட்டினை அடுத்து ஆரம்பிக்கப்பட்டன. புதிய நூலகக் கட்டிடடத்தை அமைப்பதில் அதி வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். அவர்களது முயற்சியின் மூலம் நூலகத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்களின் ஆதரவும் கிடைத்தது.

நூலகத்தின் அமைப்பிற்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்க சென்னை அரசின் கட்டிடக் கலை நிபுணர் கே. எஸ். நரசிம்மன் அவர்கள் வந்து வரைபடங்களைத் தயாரித்து உதவினார். கட்டிட அடிக்கல்நாட்டு விழா 1953ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29ஆம் திகதி நடைபெற்றது.

திராவிடக் கலயம்சம் பொருந்திய எழில் மிகு அறிவுக் கோயில் ஒன்று வெகு விரைவில் பொது மக்களின் நிறைவான ஆதரவுடன் உருப்பெற ஆரம்பித்தது.

பொது நூலகத்தின் முதற்கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு 11.10.59இல் அதி விமரிசையாக யாழ் முதல்வர் அ.த.துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூலகத்தின் ஏனைய கட்டடடங்களும் பூர்த்தி செய்யப்பட்டன.

இக்கட்டடத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் நூலகத்தை நாம் சிறப்பித்துக் கூறவேண்டும்.

பூரணத்துவம் பெற்று இயங்கி வந்த இந்நூலகத்தில் நூலகர் நூலகர் உட்பட 33 பேர் கடமையாற்றி வந்தார்கள்.

மொத்தம் 15,910 சதுர அடிகளைக் கொண்ட யாழ் பொது நூலகம், அளவில் கொழும்பு மாநகர சபையின் பழைய நூலகத்தைவிட விசாலமானது; புதிய நூலகத்திற்கு அடுத்ததாக உள்ளது.

யாழ் மாவட்டத்து, ஏன் வடமாகாணத்து, அனைத்து நூலகங்களுக்குமே இப் பொது நூலகம் தலைமைத்துவம் வழங்கி வந்ததென்றால் அது மிகைக் கூற்றாகாது. மேலும் புதிய மாவட்ட சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இதுவே யாழ் மாவட்ட மத்திய நூல் நிலையமாக இயங்கவிருந்தது.

இந்நூலகத்தின் சிதைவுக்கு முன், பின்வரும் அங்கங்கள் சிறப்பாக இயங்கி வந்தன: நூல் இரவல் வாங்கும் பகுதி, புதின ஏடுகளையும் சஞ்சிகைகளையும் கொண்ட வாசிகசாலை, சிறுவர் நூலகம், உசாத்துணை நூலகம், கருத்தரங்கக் கூடம், கலாபவனம், காரியாலயமும், நூற்சேமிப்பு அறையும்.

பல்லாயிரக்கணக்கான நகர மக்கள், சிறப்பாகக் கல்லூரி மாணவரும், சிறார்களும், சுமார் 95 ஆயிரம் நூல்களைக் கொண்ட இந்த நூலகத்தின் பல்வேறு அங்கங்களிலிருந்தும் பெரும்பயன் பெற்று வந்தார்கள்.

சிதைந்த நூலகத்தின் பின்புற வாயில் ஒன்றின் மூலம் நான் உள்ளே நுழையச் சென்றபோது வெளியே சிதறுண்டு கிடந்த ஓரளவு கரிந்து போன சில அங்கத்துவ அட்டைகளைக் கண்டெடுத்தேன். இந்நூலகத்தில் பின்வருவோர் அங்கத்துவம் பெற்றிருந்தார்கள் என்பதற்கு நினைவுச் சின்னங்களான அந்த அட்டைகள் மௌனச் சான்ற பகன்றன. யோகினி பரமநாதன், இராமலிங்கம் சபாரத்தினம், ஏ.ஜே. சக்காஃ, தம்பிராஜா சிவராஜா... இவர்களைப் போன்ற எத்தனை ஆயிரம் வாசகர்கள் தங்கள் அபிமான அறிவுத் தீபம் அக்கிரமாக அணைக்கப்பட்டதை எண்ணி இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்கள் என்றார் அருகே நின்ற நூலகப் பணியாளர் ஒருவர்.

நூலகத்தின் ஆகக்கூடுதலான நூற் தொகை இப்பிரிவிலேயே இடம்பெற்றிருந்தது. இவற்றின் விபரங்கள் எதையுமே பெற முடியாதவாறு நூற் பட்டியல் பெட்டகமும், நூல் வரவுப் பதிவேடுகளும் அழிக்கப்பட்டு விட்டன.

வெளியில் கிடந்து நான் பொறுக்கிய ஒரே ஒரு நூற் பட்டியல் அட்டை எனது நண்பர் "சோமலெ" எழுதிய 'மொரீஷியஸ் தீவு' எனும் நூல் பற்றிய தகவல்களைத் தந்தது.

உசாத்துணைப் பிரிவில் மிகவும் அரிதான விலை மதிக்க வெண்ணாத பெருந் தொகையான நூல்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. இப்பிரிவிலிருந்த நூற்தொகை சுமார் 29,500 ஆகும். இவற்றுள் பெருந் தொகையானவை அன்பளிப்பாகப் பெற்றவையாகும். இப்பிரிவில் ஏக காலத்தில் அறுபது வாசகர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாகப் போடப்பட்டிருந்த தனித்தனி மேசைகளும் கதிரைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. இவற்றைப் பயன்படுத்திய அறிவுத் தாகம் கொண்ட அத்தனை வாசகர்களும் இன்று எங்கெங்கு அலைகின்றனரோ, தமது அறிவுத் தேட்டத்திற்கு!

நான் அறிந்தமட்டில் இலங்கையிலேயே மிகச் சிறந்த சிறுவர் நூலகப் பிரிவிலிருந்த 8995 நூல்களையும் முற்றாக இழந்து விட்ட ஆயிரக்கணக்கான பிஞ்சு உள்ளங்கள் எவ்வாறு ஏங்கித் தவிக்கின்றனவோ? மலர்ந்த முகங்கள்டன் கூடிய சிறுவர் சிறுமியரின் கலகலப்பான இந்தப் பிரிவில் சித்திர நூல்களில் சிந்தையை இழக்கவும், இனிக்கும் கதைகள் படித்து இன்புற்றிருக்கவும், நூலக உதவியாளர்கள் கதை சொல்லக் கேட்டு கற்பனை உலகில் சஞ்சரிக்கவும் வரும் அக்குழந்தைகளை எண்ணும் போது எவ்வாறுதான் இந்தப் பிரிவினைச் சிதைக்க அக்கொடியோர் மனமிசைந்தனரோ என்பது எனக்குப் புரியவில்லை.

புதிய ஏடுகளும், பருவ வெளியீடுகளும் வைக்கப்பட்டிருந்த பகுதியில் அதிக சேதமில்லை. எனினும் , அங்கிருந்த ஏடுகள் அனைத்தும் ஒரு மூலையில் குவித்து தீ மூட்டப்பட்டிருந்தன. இரண்டாவது மாடியில் உள்ள கலாபவனத்தில் உபயோகத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த நூல்களைக் கூட அவர்களிட்ட தீ விட்டு வைக்கவில்லை. எஞ்சியதெல்லாம் நூலகரின் அலுவகத்தில் ஒதுக்கப்பட்டுக் கிடந்த சேதமுற்ற சிறு நூற்தொகுதியொன்று மட்டுமேயாகும்.

அந்தப் பயங்கர இரவில் நூலகத்தினுள் புகுந்தோரின் நோக்கம் எல்லாம் நூல்களை ஒழித்துக் கட்டுவதொன்று தானென்பது தெட்டத் தெளிவாகியிருந்தது.

யாழ் நூலகத்தில் நான் மேற்கொண்ட இந்த துன்பகரமான மதிப்பீட்டின் முடிவான தீர்ப்பு.

யாழ்ப்பாண பொதுநூலகம் இன்று ஒரு பழங் கதையும் கனவுமாகி விட்டது.

ஆனால் அறிவாலயங்களினதும், அறிவாற்றல் படைத்த மக்களினதும் வரலாறு என்றுமே இவ்வாறு முடிந்ததில்லை.

மதியீனர் செயலால் மறைந்த இந்த அறிவாலயம் மீண்டும் உயிர்த்தெழும் என்பது உறுதி.

யாழ் பொது நூலகத்தில் எரிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான நூல்களின் சாம்பலிலிருந்து அறிவுலகம் பெருமைப் படக்கூடிய நவநூலகமொன்று உதயமாகி அறிவுக் கதி பரப்பும் நாள் வெகு தூரத்திலில்லை என்பது எனது அசையாத நம்பிக்கையாகும்.

இச்சாட்சியத்தை 19-7-1981 ஆம் ஆண்டு வீரகேசரியில் எழுதியவர் எஸ். எம். கமாலுதீன் அவர்கள். பின்னர் இக்கட்டுரை மூதறிஞர் க. சி. குலரத்தினம் அவர்களின் யாழ்ப்பாண நூல் நிலையம் - ஓர் ஆவணம் (1997) என்ற நூலில் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டது.

குறிப்பு: 11-10-1959இல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட யாழ் நூல் நிலையம் 01-06-1981 இல் (மே 31 நள்ளிரவு) அரச படையினரால் தீ மூட்டி எரிக்கப்பட்டது

ஈசன் உவக்கும் இன்மலர்கள்

ஈசன் உவக்கும் இன்மலர்கள்

அருள்திரு. விபுலானந்த அடிகளாரைப் பற்றிய இனிய இடுகை ஒன்றை கானா பிரபா இட்டிருக்கிறார். அடிகளாரின் கட்டுரைகள் சிலவற்றை இராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளில் படித்த நினைவு இருக்கிறது. அவரைப் பற்றி மேலும் அறிய கானா பிரபாவின் இடுகை மிக்கத் துணை செய்தது.

அந்த இடுகையின் தொடக்கத்தில் அடிகளாரின் பாடல்கள் மூன்றை கொடுத்திருந்தார். அவை சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் அருமையாக இருந்தன. அடியேன் பெற்ற இன்பம் நண்பர்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை இங்கே இடுகிறேன்.

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

வள்ளலாம் இறைவன் திருவடிக்கு ஏற்ற மலரெது? வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய மலரா?
உத்தமனாம் இறைவன் திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம் தாமரையே அவன் வேண்டுவது.

காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.

மலர்ந்த தாமரையா? கழுநீர்ப்பூ மாலையா? பெரியவனாம் இறைவனுக்கு ஏற்ற மலரெது?
மலர்ந்த மலருமில்லை. கழுநீர்ப்பூ மாலையும் இல்லை. அன்பினால் வணங்கும் கூப்பிய கைகளாம் காந்தள் மலரே அரசனாம் இறைவன் வேண்டுவது.

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.

பாடிக் கொண்டு வரும் வண்டுகள் விரும்பும் பொன்னிறக் கொன்றை மலரா? உலகத்தில் இல்லாமல் தேவர் உலகில் இருக்கும் கற்பக மலரா? வேண்டுதல் வேண்டாமை இல்லாததால் எந்த வித வருத்தமும் இல்லாத இறைவனுக்கு ஏற்ற மலரெது?
பாடும் வண்டுகள் விரும்பும் கொன்றையில்லை. பாரில் இல்லாத பூவுமில்லை. அவன் அருளை எண்ணிக் கண்ணீர் விடும் விழியெனும் நெய்தல் பூ தான் தலைவனாம் இறைவன் வேண்டுவது.