தமிழுக்கு அமுதென்று பேர், அந்ததமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

Sunday, May 23, 2010

வாருங்கள் என் கல்லூரிக்கு…


வந்தனம் உங்களுக்கு!
இது தான் என் கல்லூரி
இது ஒரு காதல் கோட்டை
காதல் தேசத்தின் தலைமைப்பீடம்
காதல்கள் விற்கப்படும் கலைக்கூடம்
இதற்கு
பல சாஜகான்களும்
இடைநடுவில் இறந்துபோகாத மும்தாஜுகளும்
உரிமை கோருகிறார்கள்…
இது ஒரு சமாதியல்ல…

உள்ளே வாருங்கள்
இதோ இடப்பக்கம் இருப்பது தான்
“கொமன் றூம்”
ஓய்வு அறை
இங்கே காதலர்கள் ஓய்வெடுத்துக்கொள்வார்கள்
காதல் புகுந்து விளையாடும்
புதுமை பெறும்…
இது காதலின்
கதவு சாத்தாத கருமபீடம்…

இந்த வழியில் இருப்பது
“கொட்ராங்கிள்”
முற்றம் என்று வைத்துக்கொள்ளுங்கள்
இங்கே திசைமாறி திரும்பிய
காதல் பறவைகள்
மீண்டும் கைகோர்த்துக்கொளும்
இங்கு இறக்கைகள் சரிபார்க்கப்படும்
அவை மீள இயக்கம் பெறும்…

இதோ பாருங்கள்
இதை பச்சை மரம் என்பார்கள்
காதலிப்பவர்கள் மீது
எச்சமிடாத காகங்களை மட்டும்
அது வளர்க்கிறது…

இந்த மூன்று திசைகளிலும்
விரிவுரை மண்டபங்கள்.
அங்கே அடிக்கடி
தாமரைப்பூக்களும் ரோஜாச்செடிகளும்
மாறிமாறி அடுக்கப்படும்
இடையிடையே
கண்படாமல் இருப்பதற்கும்
கல்லெறி வாங்குவதற்கும்
சிலர் அமர்ந்திருப்பார்கள்
அவர்கள்
முள்ளை பற்றிக்கொண்டு
மலர்களை ரசித்திருப்பார்கள்…

சரி
இந்த வாசலிலிருந்து
இடப்பக்கமாக இருநூறு அடி நடந்தால்
உணவுச்சாலை
காதலர்கள்
இங்கே ஒன்றாக அமர்ந்து
தேநீர் கோப்பையில் தேன் பருகுவார்கள்
தெகிவளை சோற்றை வெள்ளவத்தை உண்ணும்
வெள்ளவத்தைச்சோற்றை தெகிவளை உண்ணும்
கம்பஹா சோற்றை காலி உண்ணும்
காலிச்சோற்றை கம்பஹா உண்ணும்…
காதலால்
ஊர்களுக்கிடையில் உணவுச்சேர்க்கை…
காதலிக்காதவர்கள்
தேநீர் கோப்பையில் தேநீர் குடிப்பார்கள்…

வாருங்கள் மேலே போகலாம்
இதோ இருப்பது தான் நூலகம்
உலகின் பல பாகங்களிலும்
காதலிக்க முடியாதவர்கள்
காதலித்தவர்களை கரம்பிடிக்க முடியாதவர்கள்
எழுதி வைத்த புத்தகங்கள்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன…
இது காதல் தோல்விகளின் கல்வெட்டு!
இங்கே
தேவதைகளும் “தேவதையன்களும்”
ஒரே புத்தகத்துள் ஒளிந்திருப்பார்கள்
காதல்
மீட்சி பெறும்
மோட்சம் பெறும்
சில வேளைகளில்
சாட்சியின்றி சலனம் பெறும.;...

அது சரி
நூலகம் வரை வந்துவிட்டீர்கள்
இது வரை என்னைப்பற்றி
எதுவுமே கேட்கவில்லையே
நான் தான்
அந்த மரத்து காகங்களினால்
தேடித்தேடி எச்சமிடப்படுபவன்…

-காரையம்சன்-

No comments:

Post a Comment