அம்மா,
இன்று அன்னையர் தினமாம்
உன்னை நினைக்கச்சொல்லி
எனக்கின்று ஓர் தினமாம்...
உண்டு களித்து உறங்கியிருப்பாய் இந்நேரம்
கண்டு களித்து கவிதை வரைய
கண்முன் வேண்டும் உன்முகம்…
கவிதை ஒன்றைத்தவிர
வேறெதையும் சிந்திக்க முடியாத
இரவு இன்றெனக்கு…
அம்மா நீ,
என்பு சதைகொண்ட அன்பு
எண்ணற்ற பேர்களில்
என்னை ஆரம்பித்துவைத்தவள் - உன்னில்
வாய் மூக்கு செவி போன்று
வளர்ந்த ஓர் அங்கம் நான்…
உதிர்ந்து நான் விழுந்தபோதும்
உதிரத்தை பாலாக்கியவள் நீ
நீ எனக்கு
கருவறைதந்த கண்ணியவாள்…
எத்தனையோ கண்டுபிடிப்புக்களில்
என்னை கண்டுபிடித்தவள்
உலகத்தை எனக்கும்
என்னை உலகத்திற்கும்
அறிமுகப்படுத்தியவள்…
அம்மா நீ என்னை
கட்டியணைத்து கதை சொன்னவள் - நான்
தொட்டிலில் கிடந்து
துன்பம் தந்தவன்…
நீ ஒரு மெழுகுவர்த்தி
நீ உருகி வழிய
உண்டானவன் நான்…
உருக்குலைந்தவள் நீ
உருப்பெற்றவன் நான்…
அம்மா
கருவறையில் காவலிருந்த தெய்வமுண்டு - நீ
கருவறையில் எனை வைத்து
காவலிருந்த தெய்வமல்லவா
என்
மூக்கு பிடித்துவிட்டது முதல்
முழங்கால் புண்வரை
முன்னின்று கவனித்தவள் நீ…
கருவானேன் தரித்துக்கொண்டாய்
சிசுவானேன் சுமந்துகொண்டாய்
முத்தமிட்டேன் முந்திக்கொண்டாய்
கண்ணீர் விட்டேன் கட்டியணைத்தாய்
கட்டியணைத்தேன் கண்ணீர் விட்டாய்
தொண்டை நாக்கை விழுங்கினாலும்
தொப்புளில் தழும்பு மறைந்திடுமா
அண்டைவெளிகள் அணைந்தாலும்
அளவில் உன் அன்பு குறைந்திடுமா
ஏழு கடல் தாண்டினாலும்
எட்டாவது கடலில் மாண்டாலும்
ஊட்டி வளர்த்தவளே
உன்னுடன் இருக்கும் ஓர் வழியை
காட்டிக்கொடுத்து விடு
காலமெல்லாம் காயம் ஆறும்.
-காரையம்சன்
No comments:
Post a Comment