யாழ்ப்பாண சமூகத்தின் ஆதிக்க சக்தியாகக் கொள்ளப் படும் வேளாள குழுமத்தின் உருவாக்கம், ஆட்சி மாற்றங்களுக்கு ஏற்ப தமது அதிகாரத்துவத்தைத் தக்க வைக்கும் தன்மை, அதற்கான பொருளாதார, கலாச்சார, கருத்தியல் கட்டுமானங்கள் பற்றிய தேடலே இக்கட்டுரையாகும்.
யாழ்ப்பாண சமூகம் பற்றிய புறவயமான சமூகவியல் பார்வை கொண்ட ஆய்வுகள் மிகவும் குறைவு. இருப்பவைகளும் சமூக அமைப்பை விவரிக்கின்றதேயன்றி சமூக, பொருளாதார, வரலாற்று வழி நின்று சமூக உருவாக்கம் பற்றியவையோ அதன் அசைவியக்கம் பற்றியவையோ அல்ல. யாழ்ப்பாண சமூகத்தின் மையமாக கொள்ளப்படுபவர்கள் வேளாளர் என்பது ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. இந்த வேளாளர் என்பவர்கள் யார்? இவர்கள்தான் எப்போதும் மேலாதிக்க சக்தியாக இருந்தவர்களா? இவர்களின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது? தமது அதிகாரத்தைக் காலமாற்றங்களுக்கு ஏற்ப பேணுவதற்கு இவர்களுக்கு உதவும் கட்டுமானங்கள் எவை?
யாழ்ப்பாண வேளாளர் சமூகம் ஒரு சாதியா? இதனை மறுக்கின்றார், 1957இல் யாழ்ப்பாண சமூகத்தை ஆய்வு செய்த பேங்ஸ். வேளாளர் பகுதி என்றே இவர் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாண சமூகத்தை ஆய்வு செய்கிற எவரும் இதனை ஒப்புக் கொள்ளுவார்கள். வேளாளர் ஒரு சாதியல்ல. யாழ்ப்பாண அரசர் காலத்தில் இருந்து ஐரோப்பியர் காலத்தினூடு விவசாய நிலத்தை மையமாகக் கொண்டு உருவான குழுமம். இதில் பல சாதிகள் பங்குபற்றியுள்ளன.
வேளாளர்-வெள்ளாளர்:
தமிழக-ஈழ சூழலில் வேளாளர், வெள்ளாளர் என்ற இரு சொற்களும் வழக்கில் உண்டு. இவை இரண்டும் ஒன்றுபோல் கருதப்பட்டாலும் இரண்டு சொற்களின் தோற்றுவாயும் வெவ்வேறு மூலங்கள் கொண்டது.
வேளாளர்:
இச்சொல்லின் மூலம் ‘வேள்’ என்பதாகும். இச் சொல்லுக்கு மூலத் திராவிட மொழியில் விருப்பம், தலைமை, ஒளிவிடு என்ற பொருள் உண்டு. யாழ்ப்பாண பேரகராதி ‘வேள்’ என்ற சொல்லுக்கு மண், தலைவன் என்று பொருள் தருகின்றது.
வேள் என்பது மன்னனுக்கும் வேந்தனுக்கும் இடையிலான அதிகாரப் படிநிலைச் சொல். வேள்கள் ஐந்திணைகளில் இருந்தும் தோன்றிய குடித் தலைவர்கள் என நிறுவுகின்றார், பழந் தமிழகத்தில் அரசுருவாக்கம் பற்றி ஆய்வு செய்த சு. பூங்குன்றன் (தொல்குடிகள்). கால் நடையுத்தத்தில் வணிக மையங்களைக் கைப்பற்றும் பூசல்களில் வெற்றி பெற்றவர்கள் ‘வேள்கள்’ ஆனார்கள். ‘வேள்’ என்பது குறிப்பிட்ட அதிகாரப் படிநிலைக் குரிய சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. வேளாளருக்கும் விவசாயத்துக்கும் ஆரம்பத்தில் எதுவிதத் தொடர்பும் இல்லை என நிறுவுகின்றார் நெல்லை நெடுமாறன். தமிழகத்தைப் போல் ஈழத்திலும் இச்சொல் சமகாலத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிராமிக் கல்வெட்டுகளிலும் மட்பாண்ட சாசனங்களிலும் இச்சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இச்சொல் இலங்கையில் பாவிக்கப்படுவதற்கு இலங்கை பெருங்கற்கால மக்கள் திராவிடராக இருந்ததே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அத்துடன் தமிழக வாணிபத் தொடர்பும் காரணமாகச் சொல்லப் படுகின்றது.
இலங்கையில் ‘வேள்’ என்ற சொல் வாணிபத் தலைவர் களுக்கு அதிகம் பாவிக்கப்பட்டாலும் அரச அதிகாரச் சொல்லா கவும் வழக்கில் இருந்துள்ளது. அரசு நிலைபெற்று வேந்தர்கள் தோன்றிய பின்பு வேள்கள் படைத்தலைவர்களாக, சமாந்தகர்களாக, வன்னிபங்கனாக மாறினார்கள். இவர்கள் போர்களில் அரசர்களுக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தார்கள். வெற்றி பெற்ற புதிய நிலங்கள் இவர்களுக்கு மானியங்களாகக் கொடுக்கப் பட்டது.
வெள்ளாளர்:
தமிழ் இலக்கிய சமூகப் பார்வை நிலங்களை ஐந்திணை களாகப் பார்த்தது. இவை குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை எனக் குறிக்கப்படும். முல்லை நிலத்திலேயே பயிர்ச் செய்கை தொடங்கியபோதும் செம்மைப்படுத்தப்பட்ட விவசாயம் மருத நிலத்திலேயே உருவானது. பெருங்கற்காலத்தில் இரும் பின் அறிமுகத்துடனும் குளநீர்ப்பாசன வசதியுடனும் ஆரம்பிக்கப்பட்ட இவ்விவசாயம் செய்த மக்களை உழவர் என இலக்கியங்கள் குறிக்கும். இவர்களின் தலைமக்களை ஊரன், மகிழன், கிழான் எனக் குறிப்பர். மழைநீரை நம்பிய இவ்விவசாய மக்களை காராளர் எனவும் குறிப்பர். கி.பி. 4ம், 5ம் நுhற்றாண்டில் ஏரி, ஆறு, நதி நீர்ப்பாசன முறைகள் பெருவளர்ச்சி கண்டது. வாய்க்கால்களில் ஓடி வரும் வெள்ளத்தை (நீர்) தேக்கி வைத்து விவசாயம் செய்தவர்கள் வெள்ளாளர்கள் ஆனார்கள். இவ்வெள்ளாளர் மருதநிலத்து தலைமாந்தரில் இருந்து தோன்றினார்கள் என்பதே யதார்த்தம். நீர்ப்பாசனத்தை அவர்களே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். பின்பு நீர்ப்பாசன அதிகாரம் முற்றுமுழுதாக அரச நிர்வாகத்துக்குள் சென்றது.
ஈழத்திலும் நீர்ப்பாசனமுறை சமகாலத்தில் வளர்ச்சி அடைந்தது. ஆயினும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அல்லது இலங்கையின் வடபகுதியில் இது விருத்தியடையவில்லை. அதற்கான ஆறுகள், நதிகள், யாழ்ப்பாணக் குடாநாட்டில் இல்லை. உண்மையில் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் என்ற சாதியே தோன்ற வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஈழத் தமிழரும் வேள்களும்:
தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்களது அரசுருவாக்கம் நடந் தேறிய பிரதேசமாக யாழ்ப்பாணமே உள்ளது. பல்வேறு குறுநில வன்னிபத் தமைமைகள் இலங்கையில் வன்னி, கிழக்கு பிரதேசங்களில் உருவாகி இருந்தாலும் ஓரளவு வலிமையான அரசுரு வாக்கம் யாழ்ப்பாண அரசுருவாக்கமே.
யாழ்ப்பாண இராச்சியம் கி. பி. 13ம் நுhற்றாண்டில் உருவானது எனக்கொள்ளப்பட்டாலும், அதற்கு முன்னோடியாக ஆட்சி அதிகார மையங்கள் இலங்கையின் வடபகுதியில் இருந்துள்ளன. நாகதீபம் எனும் ஆட்சிப் பிரதேசம்பற்றி பாளி நுhல்கள் தகவல் தருகின்றன. அது உண்மையென ‘வல்லிபுர பொன் ஏடு’ நிரூபிக் கின்றது. தொல்லியல் சாசன சான்றுகளின்படி ஆனைக்கோட் டையில் கிடைத்த ‘கோவேத’ முத்திரை, பூநகரி வேளான் சாசனம், வல்லிபுர ஏட்டில் உள்ள ‘ராய’ என்ற குறிப்பு, இவைகள் ஆட்சி அதிகாரத்துடன் தொடர்புடைய சொற்கள் ஆகும். வன்னிப் பிரதேசத்திலும் வேள் ஓட்டைக் கொண்ட சாசனங்கள் மகாவம்சம் குறிப்பிடும் வேள்நாடு, வேள்கம, வடபகுதி தலைவர் பற்றிய குறிப்புகள் ஆட்சி அதிகார மையங்கள் இருந்ததற்கான சான்றுகள் ஆகும். இதனுடன் வெடி அரசன் பற்றிய ஐதீகமும் கவனிக்கப்படவேண்டியது.
யாழ்ப்பாண இராச்சியமும் - வேளாந்தலைவர்களும்
யாழ்ப்பாண இராச்சியம் என்று குறிக்கப்படும் அரசு 13ம் நுhற்றாண்டில் பாண்டியர் சார்பாக படை எடுத்து வந்த ஆரியச் சக்கர வர்த்தி தலைமையில் உருவானது என்பது ஆய்வாளர்கள் நிறுவிய ஒன்று. எனினும் இதற்கு முன்னோடியாக நாகதீப அரசு, சோழர் அரசு, கலிங்க மகான் அரசு, சாவகன் அரசு ஆகியன இருந்தன. சோழர்கள் இலங்கையில் ஆட்சியை நிறுவியபோது முன்பிருந்த ஆட்சி அலகுகளை நிலமானிய கட்டுமானங்கள் மூலம் பலப்படுத்தினார்கள். ஊர், பற்று, நாடு, வாணிபம், வளநாடு போன்ற ஆட்சிக் கட்டுமானங்கள் ஈழத்திலும் உருவானது.
யாழ்ப்பாண அரசு உருவானபோது ஆரியச் சக்கரவர்த்தியின் படைத் தளபதிகள், பிரதானிகள், வடஇலங்கை நிர்வாகிகளாக, முதலிகளாக, வன்னிபன்களா, உடையார்களாக பதவி பெற்றார்கள் என்கிறார் வரலாற்றாய்வாளர் சி. பத்மநாதன். இவர்களே வேளாந் தலைவர்கள் எனவும் வன்னியர்கள் எனவும் அழைக்கப்பட்டவர்கள். இப்படைத் தளபதிகள் பல்வேறு குல, சாதிகளில் இருந்து உருவாகி வந்தவர்கள். இதற்கு கைலாய மாலையும் யாழ்ப்பாண வைபவமாலையும் வையா பாடலும் சான்று தருகின்றது.
இலக்கியங்கள் குறிக்கும் 24 வேளாளர் தலைவர்களில், மழவர்-9, தேவர்-2, பாணர்-2, உடையார்-1, செட்டியார்-1, முதலிகள்-2, மீதி 6 வேளாந்தலைவர்களின் சாதி தெரியவில்லை என்கிறார் முத்துக்குமாரசாமிப் பிள்ளை (யாழ்ப்பாணக் குடி யேற்றம்).
முதலி, பிள்ளை:
முதலி, பிள்ளை என்பனவும் பதவிநிலைப் பெயர்களே. இவை ஊர், பிரதேசத் தலைவர்களைக் குறிக்க தமிழகத்தில் வழக்கில் இருந்தது. தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் (சோழநாடு, தொண்டைநாடு) முதலி என்ற பெயரும், தெற்குப் பகுதியில் (பாண்டிநாடு) பிள்ளை என்ற பெயரும் வழக்கில் இருந்தது. ஈழத்தில் சோழர் வழக்கான முதலி என்ற பெயரே வழக்குக்கு வந்தது. எனினும் பிள்ளை என்பது சாதிப்பெயராக வழக்கில் உண்டு.
தமிழக வேளாளரும் - ஈழ வேளாளரும்:
தமிழகத்தில் சாதிய வடிவம் காலகட்டங்களுக்கு ஏற்ப மாற்றம் பெற்றே வந்துள்ளது. தொழில்வழிக் குழுக்களாக இருந் தவை, அகமணம் மூலம் சாதியாக நிறுவனப்படுத்தப்பட்டதும் ஏறுவரிசையில் சமூகத்தில் அவை கட்டமைக்கப்பட்டதும் நெடுங்கால சமூக இயக்கத்தில் நடந்தேறியது. சாதியத்தின் உச்ச வடிவம் விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலேயே நிகழ்ந்தது. ஆட்சிமொழி வேறுபாடு, பார்ப்பனிய செல்வாக்கு அதிகரிப்பு, வைணவமதம் அரசமதமாக மாறியது போன்றவை நிகழ்ந்த இக்காலத்தில் பூர்வீக வேளாளர் (பூர்வீக குறுநிலத் தலைவர்கள் + வெள்ளாளர்) சைவத் தமிழ் இறுக்கத்தைக் கொண்டு வந்ததும் மடங்கள் அமைத்து செயற்படத் தொடங்கியதும் நடந்தது. இக்காலத்தில்தான் வேளாளர் + வெள்ளாளர் இணைப்பு அல்லது கலப்பு தமிழகத்திலே முழுமை பெற்றது.
ஈழத்தில் வேறுமாதிரியான இயக்கம் நிகழ்ந்தது. யாழ்ப்பாண இராச்சியம் விஜயநகர மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டாலும் தனது தனித்துவத்தைப் பேணியது. போர்த்துக்கேயர் வந்து தலையிடும்வரை சுதந்திர அரசாகவே யாழ்ப்பாண அரசு இயங்கியது. அதன் அரசர்களாக ஆரியச் சக்கரவர்த்தி பரம்பரை திகழ்ந்தாலும் அதன் தூண்களாக இருந்தவர்கள் வேளான் முதலிகளே. இவ் வேளான் முதலிகள் பல்வேறு சாதிகளில் இருந்து வந்திருந்தாலும் தங்கள் அதிகாரத்தைப் பேணுவதற்கு தங்களுக்குள் திருமண உறவுகளைப் பேணிக் கொண்டார்கள். அத்துடன் யாழ்ப்பாண அரச குடும்பத்துடன் திருமணம் செய்து தங்கள் அந்தஸ்தையும் பறைசாற்றிக் கொண்டார்கள்.
போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தில் தலையிட்ட போது பல்வேறு நெருக்கடிகளை யாழ்ப்பாண அதிகார வர்க்கம் சந்தித்தது. அரச குடும்பத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் இரு மூத்த அரச குமாரர்கள் மரணத்தைத் தழுவ சங்கிலியன் ஆட்சிபீடத்தில் ஏறினான். பரநிருபசிங்கன் போர்த்துக் கேயர் பக்கம் சாய்ந்தான். முதலிகள் சங்கிலியன் சார்பானவர்கள். பரநிருபசிங்கன் சார்பானவர்களை இரு பகுதியாகப் பிரித்தார்கள். போர்த்துக்கேயரால் பரநிருபசிங்கனுக்கு அரச பதவியைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனாலும் கி. பி. 1591இல் யாழ்ப்பாண இராச்சியத்தை தங்கள் மேலாதிக்கத் துக்குள் கொண்டு வந்தபொழுது பரநிருபசிங்கன் வாரிசுகளுக்கு (பேரன்மாருக்கு) யாழ்ப்பாணத்தின் முக்கிய ஊர்களின் முதலி பதவிகளை வழங்கினார்கள். ஏற்கனவே முதலிகளாக இருந்தவர்கள் இதனால் அதிருப்தி அடைந்தார்கள். அரச குடும்ப முதலிகள் (மடப்பள்ளி வேளாளர்) ஓ வேள முதலிகள் முரண் இக் காலத்தில் உருவாகத் தொடங்கியது.
யாழ்ப்பாண இராச்சியம் முழுமையாக போர்த்துக்கேயர் கையில் கி. பி. 1619இல் விழுந்தபோது முடிக்குரிய அரச குடும்பம் நாடு கடத்தப்பட்டு கோவாவுக்கும் போர்த்துக்கல்லுக்கும் கொண்டு செல்லப்பட்டது. மற்றைய அரச குடும்பத்தவர்களுக்கும் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டது. இவர்களும் இவர்கள் சார்ந்த குடும்பத்தவருமே பின்பு மடப்பள்ளி வேளாளர் என அழைக்கப்பட்டார்கள். இவர்களைச் சார்ந்து போர் மறவர்களான கள்ளர், மறவர், அகம்படியார், மலையாள அகம்படியார் (நாயர், தீயர், பணிக்கர்), கரையார், சிவியார் செயல்பட்டதாகத் தெரி கின்றது.
போர்த்துக்கேயர் காலம் யாழ்ப்பாண வரலாற்றில் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. தோம்புகள் எழுதப்பட்டு காணிகள் விற்கப்பட்டன. இதனைப் பொருளாதார பலமுள்ள சாதிகள் வாங்கின. இத்தோம்புகளை எழுத உதவியவர்கள் வேளான் முதலிகளே. இத்தோம்புகளிலேயே விவசாய நிலம் வைத்திருந்தவர்கள் ‘வேளாளர்’ என முதன்முதலில் குறிக்கப்பட்டார்கள். வேளாளர் தலைமையில் மடப்பள்ளி வேளாளருக்கு எதிரான குழுமம் அணி திரண்டது. பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் ‘வேளாளர்’ எனப் பதிவுரீதியில் அங்கீகரிக்கப்படல் இதன்மூலம் நடந்தது.
ஆரம்பத்தில் தோன்றிய இவ்வேளாள குழுமத்துக்குள் பாணர், மழவர், தேவர், உடையார், செட்டி, சீர்பரதர், வேளாள சாணார் போன்றோர் கலந்தனர். இவ்வேளாள குழுமம் ஒல்லாந்தர் வருகையை ஊக்குவித்தது. ஒல்லாந்தரும் இவர்கள் விசுவாசத் துக்குத் தக்கபடி பதவிகளை வழங்கினார்கள். இதனால்தான் மடப்பள்ளி வேளாளனான பூதத்தம்பி முதலி போர்த்துக்கேயருடன் இணைந்து சதி முயற்சியில் இறங்கினான். அது மேலும் ஆபத்தில் முடிந்தது. இருந்த பதவிகளும் பறிபோனது. இதனைத் தங்களுக்குச் சார்பாக்கிய வேளான் முதலிகள் மக்களைச் சுரண்ட ஒல்லாந்தருக்குத் துணை போனார்கள். மக்கள் நேரடியாக ஒல்லாந்தருடன் தொடர்பு கொள்ளும் வழிகளைத் தடுத்து தமது அதிகாரத்தினைப் பேணினர்.
மடப்பள்ளியினரும் மற்றவர்களும் தங்களுக்குப் பதவிகள் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர். வேளான் முதலிகளிடம் முழுப் பதவிகளும் இருப்பது ஆபத்தென உணர்ந்த ஒல்லாந்தர் கி. பி. 1694இல் மடப்பள்ளியினருக்கும் ஏனையோருக்கும் பதவிகளை வழங்கினர். இதனை எதிர்த்து வேளாளர் கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சி அடக்கப்பட்டது. ஒல்லாந்தர் காலத்தில் கி. பி. 1694க்குப் பின்பு முதலி பகுவகித்த சாதிகள்:
1. வேளாளர், 2. மடப்பள்ளி வேளாளர், 3. செட்டிமார், 4. பரதேசி (கள்ளர், மறவர்), 5. மலையாளி (மலையாள அகம்படியார்), 6. கரையார், 7. தனக்காரர், 8. சிவியார்
இம் முதலி பதவி வகித்த சாதிகளுக்கும் நிலமானியங்கள் கிடைத்தன. இது இவர்கள் பின்பு வேளாள குழுமத்துக்குள் கலக்கக் காரணமாக இருந்தது. வேளாள ஒ மடப்பள்ளி வேளாள மோதல் ஆங்கிலேயர் கால முற்பகுதிவரை நீடித்தது. கி. பி. 1833இல் ககூல்புறூக் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட்டபோது ஒன்றுபட்ட இலங்கை உருவானது. தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்றவருக்கு வேலைவாய்ப்பு, புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர் எனில் உத்தியோகங்களுக்கு முன் னுரிமை கொடுக்கப்பட்டது. பணப்பயிர் செய்கை ஊக்குவிக்கப் பட்டது. இது சமூக மட்டத்தில் பலத்த தாக்கத்தைச் செலுத் தியது.
ஒன்றுபட்ட இலங்கை, ஆங்கிலேயர் ஆளுகைக்கு உட்பட்ட தென்னாசிய, தென்கிழக்காசிய சூழல், முதலாளித்துவ சமூகக் கட்டுமானம் என்ற பின்புலத்தில் வேளாள ஒ மடப்பள்ளி வேளாள முரண் காணாமல் போனது. இவர்களுடன் கள்ளர், மறவர், அகம் படியார், மலையாள அகம்படியார், தனக்காரர், செட்டி, தவசிகள், சிவியார் (வேளாள சிவியார்) என்பவர்கள் இணைந்த வேளாளர் குழுமம் ஆங்கிலேயர் காலக் கடைசியில் தோன்றி இருந்தது. இதற்கு ஆங்கிலக்கல்வி முறைகளும் உத்தியோகங்களும் நிலஉடைமையோடு சேர்ந்து உதவியது.
மறுபுறத்தில் கி. பி. 1810இல் கொண்டு வரப்பட்ட இலவச சேணுமுறை தடைச்சட்டம், கி. பி. 1844இல் கொண்டு வரப்பட்ட அடிமைமுறை ஒழிப்புச் சட்டம் என்பன நடுத்தர தலித் மக்களை நகர வைத்தது. இவர்களும் ஆங்கிலக் கல்வியை உத்தியோக வாய்ப்புகளை நாடினர்.
அதிகாரத்துவமும் கருத்தியலும்:
யாழ்ப்பாண வேளாளர் அதிகாரத்தைத் தொடர்ந்து பேணு வதற்கு பல காரணிகள் துணை நின்றன.
1. பொருளாதாரம் 2. எண்ணிக்கை 3. கலாச்சாரம் 4. சமயம் 5. சட்டம் 6. கோயில் 7. பள்ளிக்கூடம் 8. இலக்கியம் 9. அரசியல்
பொருளாதாரம்:
விவசாய நிலத்தைப் பொருளாதார மையமாகக் கொண்டு சுழலும் வேளாள குழுமம் பல்வேறு சாதிகளின் இணைவில் தோன்றி இருந்தாலும் இவர்களின் இணைவைச் சாத்தியமாக் கியது நிலமே ஆகும். இவர்களது மேலாதிக்கத்துக்கு காரண மாக உள்ளவற்றில் நிலத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
எண்ணிக்கை:
1957ம் ஆண்டு பாங்ஸ் கொடுத்த புள்ளி விபரத்தின்படி வேளாளர் எண்ணிக்கை 50% ஆகும். இது வேளாளரை எண்ணிக்கை அடிப்படையில் வலிமையானவர்களாக மாற்றுகின்றது. இது எப்போதும் இருந்த நிலைமையில்லை என்பதுவும் உண்மையாகும். கி. பி. 1690க்கு முன்பு யாழ்ப்பாணச் சனத்தொகையில் வேளாளர் வீதம் கிட்டத்தட்ட 10ம% ஆகும். கிபி 1990இல் 30ம% ஆகவும் 1830இல் 40% ஆகவும் 1950 அளவில் 50% ஆகவும் மாறியது. இது வேளாளர் பல சாதிகளை உள்ளிழுத்துக் கொண்டதனால் ஏற்பட்ட மாற்றம் என்பது வெள்ளிடைமலை. இதன் மூலம் வேளாளர் பாராளுமன்றம் முதல் உள்ளுராட்சிச் சபை வரை தமது ஆதிக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. வேளாள குழுமம் உள்ளுர எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் அதனை வெளித் தெரியாமல் மறைப்பது இதனால்தான்.
கல்வி:
அரசர் காலம் தொடக்கம் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேயர் காலம்வரை கல்விபெற்ற சமூகமாக வேளாள குழுமமே இருந்தது. அத்துடன் கல்வியை மற்ற சமூகங்களுக்கு மறுத்தவர்களாகவும் வேளாளர்கள் உள்ளார்கள். கல்விமூலம் கிடைத்த பதவிகளைத் தக்க வைக்கும் சமூகமாகவே வேளாளர் இருந்தனர். வேளாளர் பாடசாலைகள் நிறுவியபோதும் ஆரம் பத்தில் மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கலாச்சாரம்:
கலாச்சார ரீதியில் தீண்டாமையையும் புறம் ஒதுக்கலையும் மற்றைய சமூகங்களுக்கு வழங்கிய வேளாளர் கலாச்சாரத் தளத்தில் மற்றையவரை விளிம்புநிலையில் வைத்திருக்கவே விரும்பினர். உடை, பாவிக்கும் பொருட்கள், கலாச்சார சின்னங்கள் போன்றவற்றை மற்றையவர்களுக்குத் தடைசெய்தார்கள்.
சமயம்:
யாழ்ப்பாண வேளாள குழுமத்தை பொதுவாக சைவத்துடனும் தமிழுடனும் இணைத்துப் பார்க்கும் போக்கு உள்ளது. உண்மையில் இதுவும் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். இதனைக் கட்டமைத்தவர் ஆறுமுக நாவலர் (1822-1879). இந்துத்துவத் திற்கு எதிராக நாவலர் இதனைக் கட்டமைத்தார். இதன்மூலம் சைவ சித்தாந்தத்தையும் ஆகமநெறிகளையும் தூக்கிப் பிடித்தார். இது மறுபுறத்தில் சாதிய ஒடுக்குமுறை உக்கிரம் பெறவும் உதவியது.
போர்த்துக்கேயர் காலத்தில் கி. பி. 1638இல் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்கள் கத்தோலிக் கராக இருந்தார்கள். ஒல்லாந்தர் காலத்தில் கி. பி.1671இல் டச்சு அறிக்கையின்படி 142357 பேர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழ்ந்ததாகவும் அதில் 141456பேர் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். ஆங்கிலேயர் கால ஆரம்பத்தில் கி. பி. 1802க்குப் பின்பே பலர் இந்துமதத்திற்குத் திரும்பினர். எனினும் 1812க்குப் பின்பான மிசனரிமாரும் 1833க்குப் பின்பு புரட்டஸ்தாந்து கிறிஸ் தவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னுரிமை கிடைத்ததும் கல்விக்காவும் உத்தியோகத்துக்காகவும் பலர் மதம் மாறத் தொடங்கினர். இதற்கு எதிராக, கி. பி. 1842இல் சைவவேளாளரின் எதிர்வினையாக ‘சைவத்தமிழ்’ கருத்து வைக்கப்பட்டு அது வேளாளர் கருத்தியலாக மாறியது.
சைவவேளாளர் நவீனத்துவத்தை ஆதரித்தார்கள். ஆனால் அதனை மற்றையவர்களுக்குச் சுவற விடுவதற்குத் தயாராக இல்லை. இதுவே ஆறுமுக நாவலர் தொடக்கம் சேர் பொன் இராமநாதன்வரை தொடர்ந்தது. இதற்கு இவர்கள் தேசவழமைச் சட்டத்தை துணைக்கழைத்துக் கொண்டார்கள்.
சட்டம்:
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் வேளாளர் மேலா திக்கத்தைப் பேண வழிவகை செய்தது தேசவழமைச் சட்டமே. போர்த்துக்கேயர் காலத்தில் தேச வழமைகள் அங்கீகரிக் கப்பட்டு இருந்தது. ஒல்லாந்தர் காலத்தில் அவை தொகுக்கப்பட்டு எழுதப்பட்டது.
கோயில்:
யாழ்ப்பாண சமூக கட்டமைப்பைக் கட்டிக் காக்க அரசர் களுக்கும் பின்பு வேளாளருக்கும் கோயில்களும் உதவியது. ஒல்லாந்தர்கால நடுப்பகுதியில் கோயில்கள் தோன்றத் தொடங்கினாலும் ஆங்கிலேயர் காலத்திலேயே ஆகம முறைப் படுத்தல் முறையாக அமுல்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பல கோயில்களில் சாதிமுறையில் திருவிழா கொடுக்கப்பட்டது. இறங்கு வரிசைப்படி வெளிகள் பங்கீடு செய்யப்பட்டதும் நடைமுறையில் இருந்தது. இன்னும் இருக்கின்றது. இதனை எதிர்த்த நடுத்தர சாதிகள் தங்களுக்கு கோயில்கள் கட்டிக் கொண்டன. (கிறிஸ்தவர்களிலும் இது நடந்தது). கோயில்களில் நடந்த ஒதுக்கல்களுக்கு எதிராக பின்பு போராட்டங்கள் வெடித்தன. இன்னும் தலித்துக்கள் உள்நுழைய முடியாத கோயில்கள் யாழ்ப்பாணத்தில் உண்டு.
இலக்கியம்:
யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் தோன்றிய இலக்கியங்கள் அரசை நிலைநிறுத்தும் இலக்கியங்களாகவும் அரசுக்கு கருத்து நிலை அந்தஸ்தை வழங்கும் இலக்கியங்களாகவும் இருந்தது. அவ்விலக்கியங்களில் வேளாளர்பற்றிய மிகைப்படுத்தப்பட்ட புலமைத்துவ விளையாட்டு உண்டு. ஒல்லாந்தர் காலத்தில் ஆக்கப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலையும், தண்டி கனகராயன் பள்ளும், கரவை வேலன் கோவையும் வேளாளரைச் சிறப்பிக்கத் தோன்றியவையே.
அரசியல்:
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தரகு முதலாளிகளாக மாறிய யாழ்ப்பாண வேளாள ஆதிக்க சக்திகள் இலங்கை அரசியலில் முக்கிய சக்தியாகச் செயற்பட ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் ஆங்கிலக் கல்வி கற்ற வேளாள குழுமம் இலங்கை, இந்தியா, தென்னாசியா, தென்கிழக்காசியா, தென்னாபிரிக்கா, மொறி சியஸ் போன்ற இடங்களில் ஆங்கிலேயரின் நம்பிக்கைக்குரிய சேவையாளர்களாக மாறினார்கள்.
சென்ற இடமெங்கும் அதிகாரத்தைப் பேணும் முயற்சியில் அதிகார வர்க்கத்தின் சுரண்டலுக்குத் துணைபோய் தங்கள் மேலாண்மையைப் பேணிக்கொண்டார்கள். இதன் சமூக, அரசியல் விளைவுகள் பின்பு பலமாகவே எதிரொலித்தது.
குறிப்பு 1:
வேளாளர் என்னும் குழுமத்திலே சோழர்காலம் துவக்கம் படைத் தளபதிகளாக, பிரதானிகளாக, நிர்வாகிகளாக வந்தவர்கள் படைவீரர்கள். போர்த்துக்கேய, ஒல்லாந்தர் காலங்களில் முதலிகளாக மாறி நிலமானியம் பெற்றவர்கள் என பல சாதிகள் இணைந்தனர். அவையாவன: மழவர், பாணர், தேவர், செட்டி, கள்ளர், மறவர், அகம்படி, மலையாள அகம்படி (நாயர், தீயர், பணிக்கர்) கணக்கர், மடப்பள்ளி வேளாளர், சீர்பரதர், பட்டினவர், தனக்காரர், தவசிகள், வேளாள சாணார், (சாணாரில் இருபகுதிகள் உண்டு) சிவியார் (சிவியாரில் இருபகுதிகள் உண்டு)
குறிப்பு 2:
கரையார்கள் தொடர்ந்து கடலோடு தொடர்பு கொண்டி ருந்ததால் அவர்கள் கடல் சார்ந்தவர்களாக மாறினார்கள். சில சாதிகள் கரையார் சமூகத்திலும் கலந்தனர். தேவர், சீர்பரதர், பட்டினவர். மயிலிட்டிக் கரையாரின் பூர்வீகம் தேவர்கள் என்று தெரிய வருகின்றது.
குறிப்பு 3:
யாழ்ப்பாண வேளாளரில் இப்போது உட்பிரிவுகள் உண்டு.
1. ஆதிசைவவேளாளர் - பிள்ளைமார்
2. கார்காத்த வேளாளர் - மழவர்
3. மடப்பள்ளி வேளாளர் - மடப்பள்ளி
4. செட்டி வேளாளர் - செட்டி
5. அகம்படி வேளாளர் - அகம்படியார்
குறிப்பு 4:
ஈழத்து வன்னிப தலைவர்களும் பல்வேறு சாதிகளில் இருந்து வந்தவர்களே. வன்னிபம் என்பது பதவிப் பெயரே. மலைய மான்கள், வன்னியர், முக்குவர், படையாட்சி, பாணர் தேவர் போன்றவர்களே வன்னிப பதவிகளை வகித்தனர்.
உசாத்துணை நுhல்கள்:
1. யாழ்ப்பாணக் குடியேற்றம் - முத்துக்குமாரசாமிப்பிள்ளை
2. வையாபாடல்
3. கைலாயமாலை
4. யாழ்ப்பாண வைபவமாலை - மயில்வாகன புலவர்
5. யாழ்ப்பாண வைபவ கெளமுது - க. வேலுப்பிள்ளை
6. யாழ்ப்பாண சரித்திரம் - தொகுப்பு : சி.க. சிற்றம்பலம்
7. யாழ்ப்பாணம் - சமூகம் - பண்பாடு - கருத்துநிலை - பேராசிரியர் கா. சிவத்தம்பி,
8. சிலோன் கசற்றியர்- சைமன் காசிச் செட்டி
9. இலங்கையில் தமிழர் - பேராசிரியர் கா. இந்திரபாலா
10. ஈழத்து இலக்கியமும் வரலாறும் - பேரா. சி. பத்மநாதன்
11. சமூக விஞ்ஞானம் - தொல்குடிகள் - ஆர். பூங்குன்றன்
12. தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு - கலாநிதி வ. புஸ்பரட்ணம்
13. இலங்கையில் தமிழர் ஓர் முழுமையான வரலாறு - கலாநிதி முருகர் குணசிங்கம்
ச.தில்லைநடேசன்
Tuesday, February 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
பள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு மன்னர்க்கு ஏற்பட்டிருந்த உரிமைகளில் சிலவாவது இவர்களுக்கு வளங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மன்னர்க்குரிய உரிமைகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா? நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டில் ( கல்வெட்டு இலக்கம். 432/1914) பாணடியன் உக்கிரப் பெருவழுதி இம்மரபினர்க்கு வெள்ளை யானை வண்வட்டக் குடை கெராடி பகற்பந்தம் பாவாடை இரட்டைச்சிலம்பு இரட்டைக்கொடுக்கு நன்மைக்குப் பதினாறு கால்பந்தல் துண்மைக்கு இரண்டு தேர் பஞ்சவன்(பாண்டியன்) விருது பதினெட்டு மேளம் வளங்கி அன்றுதொட்டு இம்மரபினர் அவற்றை அனுபவித்து வந்துள்ளனர்.
ReplyDeleteகுறிப்பு:
தெய்வேநதிர குலத்தார்க்கு( மள்ளர் / பள்ளர்) வளங்கப்பட்ட மேலே கூறிய உரிமைகள் தமிழகத்தில் பிராமணர் உட்பட இன்று உயர்சாதியெனப் பாராட்டும் வகுப்புகள் ஒன்றிற்க்காவது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்
- என்று திவாகர நிகண்டும்.
செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப
- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன