தமிழுக்கு அமுதென்று பேர், அந்ததமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

Wednesday, February 3, 2010

இலங்கையில் கண்ணகியம்மன் வழிபாடு

ண்ணகி அம்மன் வழிபாடு கி.பி 171 முதல கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்தான் . கிபி 178ல் நடந்த அவ்விழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பனாகிய கஜபாகு விழாவில் கலந்து கொண்டான்.

இவ்விழாவில் பாண்டிய மன்னன் வெற்றிவேற் செழியனும், சோழ அரசன் பெருநற்கிள்ளியும், கொங்குதேச அரசன் இளங்கோ அடிகளும், மகத தேச மன்னரும் கலந்துகொண்டாதாக துரை ஜெயநாதன் ‘ஆதிதிராவிடரும் அழிந்துபோன சங்கங்களும்என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

விழாவில் கலந்த கஜபாகு கண்ணகியின் அற்பதங்களைக் கண்டு வியந்தான். கஜபாகு , கண்ணகியை செங்குட்டுவனைப் போல் நித்தியபூசை செய்து வலம் வந்து தன் நாட்டிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என்று அவன் கேட்டு பிரார்த்தித்தான். அவன் விரும்பியபடி எல்லாம் நடக்குமென ஆசி கேட்டு கஜபாகு உள்ளம் நெகிழ்ந்து கண்ணகி மேல் கூடிய நம்பிக்கை கொண்டான்.

இலங்கையில் கண்ணகி வழிபாட்டினை பரப்ப தன் விருப்பத்தை செங்குட்டுவனிடம் கஜபாகு தெரிவித்தான். செங்குட்டுவன் சந்தன மரத்தால் செய்த கண்ணகி சிலையையும் ஒரு காற்சிலம்பையும் சந்தனமரப் பேழையில் வைத்து கஜபாகுவிடம் கையளித்தான்.

கஜபாகு கண்ணகி விக்கிரகத்துடன் இலங்கைக்குத் திரும்பும்போது தன்னுடன் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல்குடிமக்களையும் அழைத்துச்சென்றான். அவன் வந்திறங்கிய சிலையுடன் வந்திறங்கியது மாதகலுக்கருகேயுள்ள சம்புகோள துறைமுகம். யானை மேல் சிலையை வைத்து பல யானைகள் பின்னே வர ஊர்வலமாய் பல இடங்களுக்கு எடுத்துச்சென்றான். ஊர்வலம் நின்றயிடமெல்லாம் கண்ணகி வழிபாடு தோன்றிற்று.

யாழ்குடாநாட்டில் கண்ணகியம்மன் வழிபாடு

இம்மன்னனால் யாழ்ப்பாணத்தில் முதலாவது கண்ணகி கோயில் ஸ்தாபிக்கப்பட்ட இடம் அங்கணாகடவை எனப்படும். அங்கனா என்பது அம்மனை குறிக்கும். சிங்களநாட்டில் 'பத்தினி தெய்யோ' என கண்ணகி அம்மனை அழைத்தனர். ஒல்லாந்தர் காலத்தில் அக்கோயிலும் சிலையும் யானையால் சிதைக்கப்பட்டது.

யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்த பல கண்ணகி அம்மன் கோயில்கள் நாளடைவில் நாக அம்பாள் , இராஜேஸ்வரி அம்பாள் , முத்துமாரி அம்பாள் என்ற பெயரில் வணங்கப்பட்டது. இன்று இளவாலை, மண்டதீவு , பளை , வீமன்காமம், தெல்லிப்பளை , மாசியப்பிட்டி , கச்சாய் , பருத்தித்துறை , புலோலி , காரைநகர் ஆகிய இடங்களில் கண்ணகி அம்மனுக்கு கோயில்களுண்டு.

மூத்ததம்பியின் யாழ்ப்பாண சரித்திரம் என்ற புத்தகத்தில் முதற் கண்ணகி அம்மன் கோயில் நாவற்குளியில் உள்ள வேளம்பாடியில் தோன்றியதென குறிப்பிட்டுள்ளார். எங்கு முதலில் கண்ணகி அம்மனுக்கு கோயில் தோன்றியதென்பதற்கு தக்க ஆதாரங்கள் கிடையாது. முல்லைத்தீவில் உள்ள பிரசித்தம்பெற்ற வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில் கஜபாகுவினால் ஸ்தாபிக்கப்பட்ட பத்தாவது கண்ணகி ஆலயம். அனுராதபுரத்தில் இசுருமுனிய விகாரகவிற்கு அருகேயுள்ள தடாகத்துக்கு முன்னால் கண்ணகி ஆலயம் அமைத்தான்.

வருடாவருடம் ஆடிமாத பூரணையில் கண்ணகிக்கு விழா எடுத்தான். இதனை சிங்களவர் 'எசல பெரஹரா' என அழைத்தனர். கண்ணகி வருகையால் இலங்கையில் மழைவளம் பொழிந்து விளைச்சல் பெருகி செழிப்புள்ள நாடாகியது.

இக்கதைக்கு மாறாக சிங்கள சரித்திர நு¡ல்கள் கஜபாகு தெனிந்தியாவுக்கு படையெடுத்துச் சென்று 24000 சிங்களவரை சிறைமீட்டி வரும்போது கண்ணகியின் விக்கிரகத்தையும் சிலம்பினையும் இலங்கைக்கு கொண்டுவந்ததாகக்கூறுகின்றன. சோழ அரசன் செங்குட்டுவன் கஸபாகுவை வரவேற்று 24.000 சிங்களவரை விடுதலை செய்யும் போது 24.000 சோழநாட்டவர்களையும் கூட்டிச்செல்ல ஒப்புதல் கொடுத்ததாக மஹாவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை.

கண்ணகியின் காற்சிலம்பிற்கு சின்னம்மை, பெரியம்மை , சின்னமுத்து, கூவக்கட்டு, குக்கல் போன்ற தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும் அதிசயமான சக்தியுண்டு என்பது மக்கள் நம்பிககை.

சிங்களப் பகுதிகளில் கண்ணகி வழிபாடு

சீதாவக்கை காலத்தில் (கி.பி 1530 - 1592) பத்தினி வழிபாடு பிரபல்யமானது. டிக்கிரி பண்டார என்ற இளவரசன் சீதாவக்கையை ஆண்ட மாயதுன்னை என்ற தன் தந்தையை நஞ்சு வைத்து கொலைசெய்து சீதாவாக்கைக்கு 1582ல் முதலாம் இராஜசிங்க என்ற நாமத்துடன் அ¡¢யாசனம் ஏறினான்.

பெளத்த தர்மத்தின்படி தகப்பனைக் கொன்ற பாவம் அவனைவிட்டு பல ஜென்மங்களுக்குப் போகாது என பெளத்த பிக்குமார் சொல்லியதைக்கேட்டு அவன் பொருமாள் என்ற பிராமணன் அல்லாத நண்பணின் உபதேசத்தின் பேரில் இந்துமதத்தை தழுவினான். கற்புக்கரசியான கண்ணகிக்கு களனி கங்கை ஓரத்தில் கொழும்பு அவிசாவலை பதையில் உள்ள கடுவலை எனும் ஊரில் கோயில் கட்டினான். இக்கோயில் போர்த்தகேயர் காலத்தில் (1505-1658) கட்டியதென கோயிலுக்கு அருகேயுள்ள கற்தூணில் உள்ள கல்வெட்டில் காணக் கூடியதாகயிருக்கிறது என காலம் சென்ற கலாநிதி செனரத் பரனவித்தாரன குறிப்பிட்டுள்ளார். மலபாரைச் சேர்ந்த நாயக்கர் பரம்பரை கண்டி இராச்சியத்தை 17ஜ9 முதல் 1815 வரை ஆண்டபோது கண்ணகி வழிபாட்டுக்கு கண்டி இராச்சியத்தில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. சமன் என அழைக்கப்கட்ட சமனலகந்த என்ற மலையின் காவல் தெய்வ வழிபாட்டுக்கு பதிலாக பத்தினி தெய்வம் வழிபாடு ஆரம்பிக்கப் பட்டது.

கஜபாகு அரசன் நடத்தி வந்த கண்ணகி அம்மன் விழாவின் தொடர்ச்சியே கண்டியில் நடக்கும் எசல பெரஹராவாகும். தலதா மாளிகை எசல பெரஹராவில் கீழ்கண்ட பெரஹராக்கள் இடம்பெறும:

தலதா மாளிகை பெரஹரா, நாத தேவாலய பெரஹரா , மஹாவிஷ்ணு தேவாலய பெரஹரா , கதிர்காம பெரஹரா , பத்தினி தேவாலய பெரஹரா.

உடகம என்ற கண்டிப்பகுதியில் இரண்டாம் இராஜசிங்கனால் (16ஜ5-1687) பத்தினி கோயில் கட்டப்பட்டது. 15 நாட்கள் இக்கோயிலில் திருவிழாக்கள் நடைபெறும். பத்தினிக்கு பதுளை, ஹங்குரன்கெட்ட என்ற சிங்களப் பகுதிகளிலும் கோயில்களுண்டு.

கதி¡காமத்திலும் பத்தினிதெய்வத்துக்கு கோயிலுண்டு. சிங்களவரிடையே பத்தினி வழிபாட்டுடன் கொம்பு விளையாட்டு , தோடம்பழம் அடிக்கும் விளையாட்டு , தேங்காய் உடைக்கும் விளையாட்டு , பூ விளையாட்டு போன்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவமுண்டு. கண்ணகியின் கணவன் கோவலனை சிங்களவர் ‘பலங்க' என்பர். 11ம் நு¡ற்றாண்டு கண்ணகி , பலங்க சிலைகள் நிக்காவெவ என்ற சிங்களப்பகுதியில் உள்ள குகையொன்றில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலையில கண்ணகி சாதாரண சிலம்புடனும் வேலைப்பாடுகள் நிறைந்த காப்புகளுடனும் காணப்படுகிறாள்.

கண்ணகி கோயில்களில் தீ மிதித்தல் தீயில் பழிகொடுத்தல் போன்றவை இடம்பெறும். கொம்பு விளையாட்டுக்கும் கண்ணகி கோவலன் கதைக்கும் சம்பந்தப்பட்ட கதை ஒன்றுண்டு. கண்ணகியும் கோவலனும் மரம் ஒன்றிலிருந்து பூப்பறிக்க கொழுக்கிகள் உள்ள இரு தடிளைப் பாவித்த போது கொழுக்கிகள் மாட்டிக்கொண்டன. அதனைக் கலட்ட முடியாமல் போனபோது ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமும் சேர்ந்து கலட்ட முயன்றபோது ஆண்கள் பக்கத்து தடி முறிந்ததாக கதையுண்டு.

கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு

அனுராதபுர மன்னன் கஜபாகு காலத்தில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட கண்ணகி வழிபாடு கிழக்கிழங்கைக்கும் பரவி இருக்காலம் என்பது பலர் கருத்து.

கஜபாகு விக்கிரகத்துடன் இலங்கை திரும்பிவந்து அனுராதபுரத்திலிருற்து 15 வருடகாலமே ஆட்சி புரிந்த படியால் அந்தச் சொற்ப காலத்துக்குள் கண்ணகி வழிபாட்டினை கிழக்கிழங்கையில் பரப்பியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இல்லையென்னபது ஒரு சாரார் கருத்து. கண்ணகி வழிபாடு கி.பி 16ம் நு¡ற்றாண்டில் மட்டக்களப்பு பகுதிகளில் அறிமுகமானதென மட்டகளப்பு மான்மியம் குறிப்பிட்டுள்ளது. கிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் சிற்றரசர்களே கண்ணகி வழிபாடு பரவலுக்கு முக்கிய பங்களித்துள்ளார்கள் என்பதக்கு பல சான்றுகளுண்டு. முல்லைத்தீவில் உள்ள வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில் வழிபாட்டிலிருந்து இவ்வழிபாடு கிழக்கிழங்கைக்கு பரவியிருக்கலாம் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதம். போர்த்துக் கேயர் காலத்தில் யாழ்குடா நாட்டிலிருந்து மட்டக்களப்பிற்கு நாடார் குடியேற்றம் ஒன்று நிகழ்ந்தது.

கந்தப்பர் என்பவர் தலைமையில் புலம்பெயர்ந்தவர்கள் தங்களுடன் கொண்டு வந்த ஏழு கண்ணகியம்மன் சிலைகளை ஏழு கிராமங்களில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வணங்கியதாகவும் அவர்கள் மண்முனைக்கு அருகாமையில் குடியேறி வாழ்ந்ததாக மட்டகளப்பு மான்மீயம் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்கிளப்பின் வெருகல் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள துறைமுகத்தில் மதுரையிலிருந்து செண்பகநாச்சியம்மன் , பத்திரகாளியம்மன் , கண்ணகியம்மன் சிலைகளைக் கொண்டு வந்ததாகவும் அதில் கண்ணகியம்மன் சிலையை மட்டக்கிளப்புக்கு தெற்கேயுள்ள ஊர் ஒன்றில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாற்றுச் செய்தியுண்டு. கி.பி 2ம் நு¡ற்றாண்டில் மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்ட செண்பகச்செல்வி என்ற கண்ணகி விக்கிரகம் தம்பிலுவில்லைச் சேர்ந்த ஊராக்க என்ற இடத்தில் ஆலயம் அமைத்து பிரதிஷ்டைசெய்து வழிபடப்பட்டது. பெளத்த சிங்கள அரசர்களினதும் , தமிழ் அரசர்கள், சிற்றரசர்களினதும் ஆதரவில் கி.பி 2ம் நு¡ற்றாண்டு தொடக்கம் 12ம் நு¡ற்றாண்டு வரை கண்ணகி வழிபாடு செழித்து வளர்ந்தது.

திருக்கோயில் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் அர்ச்சகர்களாக பணிபுரிய வீரசைவககுருமார்கள் அக்காலத்தில் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் தம் பட்டர் என வாழ்த்தி குடியேற்றி அவ்வூருக்கு தம்பட்டை என நாமம் சூட்டப்பட்டது. மேலும் இவர்களது வழிபாட்டுக்காக மல்லிகார்ச்சுன புரத்திலிருந்து கணேஷ விக்கிரகம் ஒன்று பெறப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் மேலும் மேகவண்ணன் தனது தாயார் தம்பதிநள்ளாள் பெயரில் வாவியொன்றையும் வெட்டுவித்து அவ்வாவிக்கு தம்பதிவில் எனப்பெயர் இட்டான். வில் என்ற சொல் வில்லைப் போன்ற குளத்தைக் குறிக்கும்.

மழைபொழிய வேண்டி கொம்பு விளையாடல் என்ற வழிபாட்டின் மூலம் கண்ணகியம்மனை வழிபடுவார்கள். தம்பிலுவில கண்ணகியம்மன் கோயிலில் இவ்விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுகிறது. பொதுவாக கண்ணகி கோயிற்கதவுகள் ஆண்டுக்கொரு முறை திறக்கப்பட்டு பதத்தி என்ற முறைப்படி 10 நாட்கள் வரை பூஜஜகள் செய்யப்பட்டு பின் கதவுகள் மூடப்படும். மக்கள்பெருதளவில் கூடி பயபக்தியுடன் வணங்குவர். கள்ளங்குடா, ஆரையம்பதி, செட்டிப்பாளையம், களுவாஞ்சிக்குடி, துறைநீலாவணை ஆகிய இடங்களில் உள்ள கண்ணகி கோயில்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்களில் வேறுபாடுகளுண்டு.

ஈழத்தில் பிரசித்தம் பெற்ற கண்ணகியம்மன் கோயில்கள்

கண்ணகி அம்மன் கோயில் வலந்தலை காரைநகர்

1725ல் ஸ்தாபிக்கப்பட் ட பழம் பெருமை வாய்ந்த கோயிலிது. சந்தனமரத்திலான கண்ணகி அம்மனும் , வைரவருமுண்டு. வருடாவருடம் சித்திரை வருடப்பிறப்பை அடுத்துவரும் முதல் வெள்ளிக்கி¨மை கும்பம்வைத்து ஒன்பது நாட்களுக்கு திருவிழாநடைபெறும்.

கண்ணகியம்மன் கோயில், இத்தியடிபுலம், புங்குடுதீவு

சுமார் 130 வருடங்கள் பழமையான ஆலயமிது. பல வருடங்களுக்குமுன் இரை தேடிச்சென்ற தனது தனது கால்வடைகள் திரும்பாதறிந்த இடையன் ஒருவன் அவைற்றை தேடிச்சென்றான். தனது காலநடைகள் ஒரு பேழையைச் சுற்றி படுத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, பேழையைத் திறந்து பார்த்த போது அதனுள் கண்ணகி விக்கிரகம் இருப்பதைக் கண்டதாக கதையொன்றுண்டு. ஆடிப்பூரம் இங்கு விசேஷமான தினமாகும். வருடாந்த உற்சவம் சித்திரை மாதத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்று சித்திரைப் பெளர்ணமியன்று தேர்திருத்விழாநடைபெறும். மூலமூர்த்தி கண்ணகி. பரிவாரமூர்த்திகள் இராஜஇராஜேஸ்வரி, பிள்ளையார் , முருகன் பத்திரகாளி. நடராஜர், வைரவர் ஆகியோர் உளர். பெரிய இராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலின் பெயரை இராஜஇராஜேஸ்வரி அம்மன் கோயிலென்றும் அழைப்பர்.

கண்ணகி அம்மன் கோயில், அங்கணாக்கடவை சண்டிலிப்பாய்

இலங்கை மன்னன் கஜபாகு கண்ணகி சிலைகளையும் காற்சிலம்புகளையும் சேரன் செக்குட்டுவனிடமிருந்து பெற்றுக் கொண்டு தனது பரிவாரங்களடன் யாழ்ப்பாணத்தின் மாதகலுக்கு அருகேயுள்ள சம்புகோளம் என்ற பிரசித்தம்பெற்ற துறைமுகத்தில் வந்திறங்கினான். இலங்கையில் இம்மன்னனால் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது கண்ணகி ஆலயம் யாழ்ப்பாணம் திருவடிநிலைக்கு அருகாமையில் உள்ள அங்காணாக்கடவையில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து அனுராதபுரத்துக்கு பூநகரி வழியாகச் செல்லும் பாதைகளில் உள்ள ஊர்களில் கண்ணகிக்கு ஆலயங்கள் அமைத்தான் என யாழ்ப்பாணச் சா¢த்திரத்தில் முதலியார் செ இராசநாயகம் குறிப்பிட்டுள்ளார். அடையளாம் காணமுடியாத அங்காணாக்கடவை கண்ணகி கோயில் தற்போது கந்தரோடையில் உள்ளகதிரமலைக்கருகாமையில் இருந்ததாகவும் சரித்திர வல்லுனர்கள் கூற்று.

கண்னகியம்மன் கோயிலுக்கு எதிர்புறத்திலிருந்து கல்லாலான கஜபாகு மன்னனின் சிலை சில நு¡ற்றாண்டுகளுக்கு முன் யானையொன்றினால் சிதைக்கப்பட்டு பின் சிலையின் கால் பகுதியும் தலையும் கலாநிதி பீரிஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு யாழ்ப்பாண நூதனசாலையில் வைக்கப்பட்டது. இக்கோயில் இப்போது சிறுதளவில் இயங்குகிநது. வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பாக நடைபெறும். பக்கத்து ஊர்களான நவாலி , மாதகல் ஆகிய கிராமங்களிலும் கண்ணகிக்கு கோயில்கள் உண்டு. மாதகல் என்ற பெயர் மாதா என அழைக்கப்படும் கண்ணகியம்மனின் கல்லினாலான விக்கிரகம் வந்திறங்கியபடியால் வந்ததென ஒரு கதையுண்டு.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் , முல்லைத்தீவு

தமிழ்நாட்டில் கண்ணகி அம்மனுக்கு கோயில் அமைத்த காலம் தொடக்கம் இத்தலம் இருந்து வருகிறது. கஜபாகு அரசனால் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட பழமைவாய்ந்த பத்தாவது கண்ணகியம்மாள் கோயிலிது எனகருதப்படுகிறது.

கண்ணகியம்மாள் வந்தமர்ந்த இடமாகிய பத்தாம்பளை. என்பது மருவி வற்றாப்பளையாயிற்று என்பது வரலாறு. மூலமூர்த்தியாக கண்ணகியம்பாள் வீற்றிருக்க , விநாயகர் , நாகதம்பிரான் , ஆகிய மூர்த்திகள் பரிவாரத்தில் உள்ளனர். கடல் நீரில் கோயில் விளக்கு எற்றுவதாக மக்கள் கருத்து. கொக்கிளாயிலும் கண்ணகி அம்மனுக்கு கோயிலுண்டு.

யாழ்குடாநாட்டிலும் வன்னிப்பகுதிகளிலும் மற்றைய கண்ணகி கோயில்கள் :

  • கண்ணகியம்மன் கோயில் , மண்டைதீவு - 1942ல் ஸ்தாபிக்கப்பட்டகோயிலிது.
  • கண்ணகியம்மன் கோயில் ஏழாலை
  • கண்ணகியம்மன் கோயில் மேளாய் , நல்லு¡ர் , பூநகரி
  • கண்ணகியம்மன் கோயில் , காங்கேசன்துறை
  • துர்துலிடைக்க கண்ணகியம்மன் கோயில் , தையிட்டி, காங்கேசன்துறை. 182 இல் ஸ்தாபிக்கப்பட்டது.
  • கண்ணகியம்மன் கோயில் , வீரமாணிக்கதேவன் துறை, மயிலிட்டி.
  • கண்கியம்மன் கோயில் நாகர்கோயில் - இது மிகப்புராதன ஆலயம்.
  • தலவிருட்சம் ஆல். பழமைவாய்ந்த கோவலன் கண்ணகி கதை ஏடு ஒன்றுண்டு. 1978ல் கோயில் கல்லினால் கட்டப்பட்டது.
  • கண்ணகியம்மன் கோயில் , புத்தூர்.
  • கண்ணகியம்மன் கோயில் , கோப்பாய் வடக்கு.
  • கண்ணகியம்மன் கோயில் , அச்செழு , நீர்வேலி.
  • கண்ணகியம்மன் கோயில் , கைதடி.
இக்கோயில்கள் சிவன், முருகன் , பிள்ளையார், சக்தி கோயில்களைக் போல்பிரசித்தமானவையல்ல . ஆனால் எவ்வளவுக்கு கண்ணகி வழிபாடு கிராமங்களில் பரவியிருந்ததை எடுத்துக்காட்டுகிறது.

தீவகத்தில் சில கண்ணகி கோயில்கள் இராஜஇராஜேஸ்வரி கோயிலாக பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இத்தியடிப்புல கண்ணகியம்மன் கோயில் இதற்கு சான்று. மண்டைதீவில் உள்ள கண்ணகியம்மன் கோயில் பூசாரிகள் பிராமணரல்லாதோர்.

ஸ்ரீ கண்ணகி அம்பாள் கோயில் காரைதீவு .

500 வருடங்களுக்கு முன் காரேறு மூது¡ர் என்ற பெயர் வழக்கிலிருந்த போது ஸ்தாபிக்கப்பட்டது. இப்பெயர் திரிந்து காரைதீவாயிற்று. கதிர்காமம்செல்லும் யாத்திரிகர்கள் இக்கோயிலில் தங்கிச் செல்வது வழக்கம். கோயிலின் தலவிருட்சம் வயது முதிர்ந்த வேப்ப மரம். இப்பகுதியை அரசாண்ட வன்னிய மன்னன் நிலபுலன்களை பார்வையிட வந்த சமயம் அரசனின் யானை கீழே விழுந்து மயங்கி படுத்ததாகவும் அப்போது கோயில் மணி ஒலிக்க அங்கு வந்த ஏவலாளர்கள் கோயிலின் மகிமையை அரசனுக்கு எடுத்துச் சொன்னார்கள். கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த தேவந்தி என்ற பெண் விவரம் அறிந்து வேப்பமிலை அரைத்து குளிகைசெய்து யானைக்கு கொடுத்து தீர்த்தம் பருக்கியபின் யானை எழுந்ததாகவும் ஒரு கர்ணபரம்பரை கதையுண்டு.

அதற்கு கைமாறாக அரசன் ஆலயம் அமைத்து கொடுத்தானாம். அரசனுடைய இரு மனைவியர்களில் ஒருவாரான சிறிய பூற்கோதைக்கு இழந்த கண்பார்வை அம்மனை வணங்கியதால் கிட்டியதாகவும் கதையுண்டு. ஆலயம் தொடர்பான வழக்குலை என்னும் என்ற ஏடு ஒன்றுண்டு. வருடா வருடம் 7 நாட்கள் நடக்கும் உற்சவத்தில் இது தினமும் பாடப்பெற்று நிறைவு பெறும். 1976 ல் கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில்

கி.மு 5ம் நு¡ற்றாண்டில், விஜயன் காலத்தில் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் ஆதித்திராவிடர்களான நாகர் குடி மக்கள். கி,மு 600ம் நு¡ற்றாண் டில் இப்பிரதேசம் நாகர் முனை எனப்பெயர் பெற்றதாக மட்டகிளப்பு மானமீயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 1ம் 2ம் நூற்றாண்டில் திருக்கோயில் துறைமுகம் பிரபல்யமடைந்திருந்தது.

இத்துறையினூடாக தமிழ்நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த காவிரிப்பூம்பட்டணத்துடன் வர்த்தகத் தொடர்பு இருந்ததாக ‘கண்ணகி வழக்குரை' என்ற கிராமீய இலக்கியம் குறிப்பிட்டுள்ளது.

கஜபாகு மன்னன் அனுராதபுரத்தை ஆட்சி செய்த காலத்தில் (கி.பி 171 -193) மட்டக்கிளப்பு பகுதிகளுக்கு கண்ணகி வழிபாடுவந்ததாகவும் அதன் பின் கதங்கள்¢ழக்கு இலங்கையின் வெவ்வேறு ஊர்களை ஆட்சிசெய்த சிற்றரசர்கள் ஆட்சி பிரதேசங்களில் கண்ணகி வழிபாட்டினை பரப்பியதாக வரலாற்று குறிப்புகளுண்டு. மேலும் இவ்வழிபாடு முல்லைத்தீவிலிருந்து கடல்மார்க்கமாக மட்டக்கிளப்பு பகுதிகளுக்கு வந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளுண்டு.

கி.பி 1626ல் கண்டி மன்னன் செனரதன மலேய வீரர்களின் உதவியுடன் போர்த்துக்கேயரை மட்டக்கிளப்பில் இருந்து அகற்றி மலாய வீரர்களை காவலுக்கு வைத்தான். அக்காலப்பகுதியில் மட்டக்கிளப்பில் நாடார் குடியேற்றம் நடந்தது. யாழ்குடாநாட்டிலிருந்து கந்தப்பர் என்பவரது தலைமையில் புலம் பெயர்ந்து வந்த குடும்பங்கள் ஏழு கண்ணகி விக்கிரகங்களையும் தங்களுடன் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து வணங்கத் தொடங்கினரென மட்டகிளப்பு மான்மியம் கூறுகின்றது.

கி.பி 159ஜ -180ஜ வரையுள்ள கண்டி மன்னர்களினது காலத்தில் தம்பிலுவில் பிரதேசத்தில் கண்ணகி வழிபாடு சிறப்புற்றிருந்ததுக்கு இலக்கிய தொல்லியல் சான்றுகள் உண்டு. சிங்கள அரசர்களும் நாயக்கர் வம்ச கண்டி மன்னர்களும் கண்ணகி வழிபாட்டனை ஆதரித்து மானியங்கள் பல வழங்கிவந்துள்ளனர்.

கிழக்குப் பகுதி கிராமங்களில் பின் வரும் கண்ணகியம்மன் கோயில்கள் குறிப்பிடப்படவேண்டியவை:

  • பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் கோயில் , பனங்காடு , அக்கரைப்பற்று.
  • கண்ணகி அம்மன் கோயில் சம்மாந்துறை.
  • கண்ணகி அம்மன் கோயில் , வீரமுனை, சம்மாந்துறை.
  • கண்ணகி அம்பாள் கோயில் களுவாஞ்சிக்குடி. இது 200 வருடங்களுக்கு முற்பட்ட புராதான ஆலயம். வைகாசி பெளர்ணமிக்கு மன் 7 றாட்களுக்கு கதவு திறக்கப்பட்டு விசேட வழிபாடு நடைபெறும்.
  • கடற்கரை கண்ணகி அம்பாள் கோயில் , கல்முனை.
  • கண்ணகி அம்மன் கோயில், துறைநீலாவணை. மட்டக்கிளப்பு மான்மியத்தில் இக்கோயிலைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கண்ணகி அம்மன் கோயில் விடத்தல்முனை , புளியந்தீவு.
  • கண்ணகி அம்மன் கோயில் தாளங்குடா , காத்தான்குடி.
  • கண்ணகி அம்மன் கோயில் புன்னைச்சோலை , அமிர்தகழி , மட்டக்கிளப்பு.
  • கண்ணகி அம்மன் கோயில் , சத்துருக்கொண்டான், மட்டக்கிளப்பு . 100 வருடங்களுக்கு முற்பட்ட கோயிலிது.
  • கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , வாளைச்சேனை.
  • கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , சித்தாண்டி
  • கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , கிரான்.
  • கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , முறக்கொட்டாஞ்சேனை

கண்ணகியம்மன் கோயில்களின் எண்ணிக்கையிலிருந்து யாழ்குடா நாட்டை விட கிழக்கு ஈழத்தில் எவ்வளவு து¡ரத்திற்கு கண்ணகியம்மன் வழிபாடு கிராமங்களில் இயல் இசை நாடகங்களுடன் ஒன்று கலந்து பரவியிருந்ததை அறியக் கூடியதாகயிருக்கிறது.

அடிக்குறிப்புகள்:
  • யாழ்ப்பாண சரித்திரம் - முதலியார் செ இராசநாயகம்.
  • மட்டக்களப்பு மான்மீயம் - F X C நடராஜா
  • தம்பிலுவில் கண்ணகி வழிபாடு -நா நவநாயகமூ¡த்தி
  • பத்தினி வழிபாடு - தொகுப்பாசிரியர் தீரு சி கணபதிப்பிள்ளை
  • மட்டக்களப்பு தமிழகம் - வித்துவான் பண்டிதர் வி.சி.கந்தையா.

சீரணி ஸ்ரீ நாகபூஷணியம்மை, சண்டிலிப்பாய்

முத்துமாரியம்மன், ஆவரம்பிட்டி, அராலி கிழக்கு

No comments:

Post a Comment