தமிழுக்கு அமுதென்று பேர், அந்ததமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

Monday, June 28, 2010

தமிழ் மருத்துவமும் சித்தர்களும்


6/11/2010

தமிழ் மருத்துவத்தில் முக்கியமாக சித்தர்கள் கருதப்படுகிறார்கள். இவர்கள் வடமொழியில் இருந்த மருத்துவக்கருத்துக்களை தமிழில் மாற்றியமைப்பதில் வல்லமை பெற்றிருந்தனர். சித்த மருத்துவம் தமிழ் மருத்துவமாக மாறுவதற்கு காரணமான சித்தர்களை சித்தமருத்துவ நூல்கள் பட்டியலிடுகின்றன. இந்நூல்களில் சில சித்தர்கள் விடுபட்டும், சிலர் சேர்க்கப்பட்டும் மொத்தமாக பதினெண் சித்தர்கள் என வகைப்படுத்தியிருக்கிறார்கள். இதனை பதினெண்சித்தர் நாடிசாஸ்திரம், பதினெண்சித்தர் ஞானக்கோவை, பதினெண்சித்தர் மூலிகை அகராதி என்பன சுட்டிக்காட்டுகின்றன. சித்தர்கள் குரு சீட பரம்பரையாக தமிழ் மருத்துவத்தை மனவழியில் போதித்தனர். இதில் பாடல்களே கூடுதலாகக் காணப்படுகின்றன.

பிற்காலத்தில் சித்தமருத்துவர்கள், பண்டிதர்களால் பனையோலையில் எழுதப்பட்டு தற்போது நூலுருவிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் மாற்றப்பட்டு வருகின்றன. இச்சித்தர்கள் அரசஆதரவையோ அல்லது தழிழ்ச்சங்களின் ஆதரவையோ பெறாமல் தமது ஆத்மீக பலத்தை நம்பி மனித சமுதாயத்துடன் இணைந்து வாழாமல் காட்டில், மலைக்குகைகளில் வாழ்ந்து தமிழ் மருத்துவத்தை வளர்தெடுத்தனர். பதினெண்சித்தர்களில் அகத்தியர் முருகனிடம் தமிழ் கற்றவர் என அறியப்படுகிறது. அகத்தியர் 21000, அகத்தியர் பரிபூரணம், அகத்தியர் ஆயுர்வேதம், அகத்தியர் நயனவிதி, அகத்தியர் குணபாடம், அகத்தியர் இரத்தினச்சுருக்கம் -300, அகத்தியர் வைத்தியகாவியம் 1200 எனப் பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். இலங்கையில் அகத்தியரின் வைத்தியமுறைகளைப் பரப்பியவர் புலத்தியர் சித்தர் எனவும் அவர் யாழ்ப்பாணத்தில் சமாதியானார் எனவும் கூறப்படுகிறது. இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் தமிழ் பரம்பரை வைத்தியர்கள் தமது மருத்துவ மூலநூலாக அகத்தியர் மருத்துவ காவியங்களை இன்றும் பயன்படுத்துகிறது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

போகர் எனும் சித்தர் முருகப்பெருமானின் அருள் பெற்றவர். போகர்-700,போகர் நிகண்டு, போகர் சரக்கு வைப்பு- 800 எனப் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இரசவாதக்கலையில் வல்லுனரான இவர் பழனியில் பாடாணங்களைக் கொண்டு பழனிசாமியை பிரதி~;டை செய்வித்தார். இலங்கையில் கதிர்காமத்திலும் முருகனுக்கு இயந்திரம் செய்வித்தார்.

இதன் பலனான இலங்கையில் கதிர்காமம், நல்லூர், செல்வச்சந்நிதி ஆகிய இடங்களிலும் ஈழத்துச் சித்தர் பரம்பரை உருவாக வழிவகுத்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தேரடியில் செல்லப்பாவுசுவாமிகள், யோகசுவாமிகள் என்போhரின் அருள் பாலிப்பால் யாழ்ப்பாணத்து தமிழ்மருத்துவம் சிறப்பிடம் பெறுகிறது. யோகசுவாமிகள் அருள் வாக்குப்பெற்று கந்தர்மடம், வண்ணார்பண்ணை, கஸ்தூரியார் வீதியில் பல சித்த வைத்தியர்கள் பிரபல்யமாக வைத்திய சிகிச்சை புரிந்தார்கள். இதில் கஸ்தூரி முத்துக்குமாரு வைத்திய பரம்பரை முக்கியமானதாகும்.

இன்றும் நல்லூர் கோவிலை அண்டிய பகுதியில் குடையிற்சுவாமிகள் வைத்திய நிலையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. திருமூலரால் எழுதப்பட்ட திருமந்திரத்தில் சித்த மருத்துவக்கருத்துக்கள் உடலின் தோற்றம், கருவுற்பத்தி, ஆரோக்கிய வாழ்வு என தமிழ் மருத்துவகருத்துக்களை எழுதியுள்ளார். இன்றும் விஞ்ஞான ஆராய்ச்சியில் கண்டு கொள்ள முடியாத மருத்துவ சிந்தனைகளைக் கூறியிருப்பது அவரின் மெய்ஞான, விஞ்ஞான அறிவின் வளர்ச்சியை கோடிட்டுக் காட்டுகிறது. இராமதேவர் அரேபியா சென்று தமிழ் மருத்துவத்தைப் பரப்பியதால் அதிலின்று மேலைத்தேய மருத்துவம் வளர்வதற்கு அடிகோலினார். யூகி முனிவர் ஒரு மருத்துவ மேதையாவார் யூகிசிந்தாமணி, யூகிவாதகாவியம் என்ற 3000 பாடல்களைப் பாடியுள்ளார். இவ்வாறு புலிப்பாணி என்பவர் புலிப்பாணி 500, புலிப்பாணி பலதிரட்டு என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார்.

முடிவாக சித்தர்கள் சமஸ்கிருத மொழியில் இருந்த வைத்திய காவியங்களை தமிழில் எழுதுவித்ததார்கள். வைத்தியத்தில் மருந்துகளை கண்டுபிடித்து நோய்ப்பிணி தீர்ப்பதில் வல்லுனர்களாக விளங்கினார்கள். பாடல்களாக ஆரோக்கிய வாழ்விற்கு நோய்அணுகாவிதிகளை பாடியுள்ளார்கள். இந்தியா,இலங்கை, ஆபிரிக்கா, சீனா, எகிப்து,அரேபியா நாடுகளில் தமிழ்மருத்துவத்தை பரப்பியுள்ளார்கள். குருசிஷ்ய முறையினூடாக சிஷ்யர்களுக்கு மருத்துவத்தைப்புகட்டி மருத்துவ வளர்ச்சிக்கு உதவியுள்ளார்கள். மருத்துவ முறையில் காயகற்பமுறைகளை கண்டு பிடித்து நரை,மூப்பு,பிணி வராது பாதுகாப்பதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். முடிவாக தமிழ்மருத்துவ வளர்ச்சியில் சித்தர்கள் பெரும்பங்காற்றியுள்ளார்கள்.

விளக்கச்சொல்:- காயகற்பம், நரை, மூப்பு, பிணி

மருத்துவர்:- மிதிலைச்செல்வி -ஸ்ரீகாந்தன் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம்-1, சித்த மருத்துவப்பிரிவு, திருகோணமலைவளாகம்,

கிழக்குப் பல்கலைக்கழகம்., இலங்கை.

No comments:

Post a Comment